முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கேங்மேன் தொழிலாளர்கள் 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஒருங்கிணைப்பாளர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 5,493 ஒப்பந்த மின்சார கேங்மேன் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கக் கோரி நேற்று சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ அலுவலகத்தை பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீஸார் போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். நள்ளிரவு அனைவரையும் பலத்த பாதுகாப்புடன் கோயம்பேடு பேருந்து நிலையம் அழைத்து சென்ற போலீஸார் அனைவரையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததுடன் பேருந்து புறப்படும் வரை அங்கேயே காத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கொளத்தூர் போலீஸார் முதல்வர் எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட 800 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், காயம் ஏற்படுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும் இப்போராட்டத்தை வாட்ஸ் அப் குழு அமைத்து ஒருங்கிணைந்த புதுக்கோட்டையை சேர்ந்த சின்னையன்(25), திருவண்ணாமலை சுரேஷ்குமார் (35), திண்டுக்கல் விஜயகுமார் (24), சென்னை திருவிக நகரை சேர்ந்த ஜெயகுமார்(30) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேருந்து, ரயில்களில் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர், ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,
அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.