`நிலுவைத் தொகை ரூ.20,860 கோடியை உடனே விடுவியுங்கள்'

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
`நிலுவைத் தொகை ரூ.20,860 கோடியை உடனே விடுவியுங்கள்'

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.20,860 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

டெல்லிக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல் நாளான நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடி, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் 2வது நாளான இன்று, டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.20,860 கோடியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீட்டுக்கு நிலுவை தொகை வகையில் தமிழ்நாட்டிற்கு ரூ.13,504.74 கோடி தர வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக ரூ.7,899.69 கோடி வழங்க 14-வது நிதிக்குழு பரிந்துரைத்தது. நிதிக்குழு பரிந்துரைத்ததில் 2,900 கிராம ஊராட்சிகளுக்கான ரூ.548.76 கோடி மானியம் வழங்கப்படவில்லை. 2700 ஊராட்சிகளிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால் மானிய தொகையை உடனே விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.20,860.40 கோடியை விடுவிக்கவேண்டும். ரூ.20,860.40 கோடியில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் ரூ.13,504.74 கோடி இருக்கிறது.

ஜிஎஸ்டி உள்பட 16 திட்டங்களுக்கான தமிழகத்திற்குரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கும் காலம் ஜூனுடன் முடிந்தாலும் மேலும் 2 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். ஜூனுக்கு பின் இழப்பீடு தொகை தராவிடில் 2022-2023-ல் தமிழகம் ரூ.20,000 கோடி வருவாய் இழப்பை சந்திக்கும். 2018-2019, 2019-2020-ம் ஆண்டுகளுக்கான உள்ளாட்சி மன்ற செயல்பாட்டு மானியத் தொகை ரூ.2029.22 கோடியையும் விடுவிக்க வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in