`சிறிய தப்பு பண்ணினாலும் அது பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துவிடும்'

`சிறிய தப்பு பண்ணினாலும் அது பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துவிடும்'

மேயர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

"மக்களுக்கு சிறிய நன்மை செய்தாலும் அது பெரிய பெயரை வாங்கித் தரும். சிறிய தப்பு பண்ணினாலும் அது பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துவிடும்" என்று அனைத்து மேயர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மேயர் நிர்வாகப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலத்தில் நடத்துவதுதான் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படை. அதில் எப்போதும் உறுதியாக இருக்கக்கூடிய அரசுதான் திமுக. எவ்வித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

1996-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்தான். என்னுடைய முதல் கன்னிப் பேச்சை தயாரித்து, அது சரியாக இருக்கிறதா என்று கலைஞரிடத்தில் கொண்டு போய் காண்பித்தேன். அவர் படித்து பார்த்து, நன்றாக இருக்கிறது. ஆனால் இரண்டு திருத்தம் செய்கிறேன் என்றார். என்ன திருத்தம் என்றால், இரண்டு இடத்தில் மேயர் பதவி என்று போட்டிருந்தேன். அந்த பதவி என்கிற வார்த்தையை அழித்துவிட்டு, பொறுப்பு என்று மாற்றினார். எதற்காக இதை மாத்தினேன் என்று என்னிடம் கேட்டார். எதற்கு என்று நான் கேட்டேன். அவர், உனக்கு மக்கள் கொடுத்திருப்பது மேயர் பதவி அல்ல, மேயர் பொறுப்பு. அதனால், நீ பொறுப்போடு நடந்து கொண்டு பொறுப்போடு பணியாற்றினால்தான் அது மக்களுக்கு போய் சேரும் என்று எடுத்துச் சொன்னார். அதைத்தான் நான் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். இன்று பொறுப்புக்கு வந்திருக்கிற நீங்கள் இதை பதவி என்று நினைக்காமல் பொறுப்பாக நினைத்தால் பொறுப்போடு உங்களால் பணியாற்ற முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து சிறந்த முறையில் அனுபவம் பெற்றிருக்கக்கூடிய நேருவாக இருந்தாலும், சேகர் பாபுவாக இருந்தாலும், மா.சுப்பிரமணியனாக இருந்தாலும் அவர்கள் சொன்ன கருத்தை நீங்கள் உள்வாங்கி இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். எப்போதும் வேகமாக இருக்கக்கூடியவர் அமைச்சர் நேரு. இந்த மேடையில் பார்த்திருப்பீங்க. அங்கும் இங்கும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக, வேடிக்கையாக சொல்லணும் என்றால் மனைவியை கொஞ்சம் போதுகூட வேகமாகத்தான் கொஞ்சுவாரு. எல்லாவற்றிலும் வேகம்தான். அதிகாரிகள் என்னென்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத்தான் தெரியும். அவ்வளவு வேகம் இங்கு இருக்க வேண்டும். அதற்காகத்தான் அவரை தேர்ந்தெடுத்து இந்த துறைக்கு அமைச்சராக நியமித்திருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

என்னுடைய அரசியல் அரிச்சுவடு கூட உள்ளாட்சி அமைப்புதான். எனவே உள்ளாட்சி அமைப்புகள் எவ்வளவு முக்கியத்துவம் என்பது நன்றாக தெரியும். மக்களுக்கு சிறிய நன்மை செய்தாலும் அது பெரிய பெயரை வாங்கித் தரும். சிறிய தப்பு பண்ணினாலும் அது பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துவிடும். அதை மறந்துவிடாதீங்க. அதனால் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருக்கும் நீங்கள் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். உள்ளாட்சித் துறை நடவடிக்கையும் மாமன்ற நடவடிக்கையும் சிறந்து விளங்கிட மாநகராட்சியினுடைய சட்டங்களையும் விதிமுறைகளையும் மேயர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மாமன்றத்தினுடைய நடைமுறை குறித்த சட்ட விதிகள், நிர்வாக வழிமுறைகள், கணக்கு முறைகள், நிதி நிர்வாகத்தை அனைத்தும் அறித்து கொள்ளும் வகையில் நீங்கள் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். விதி மீறல்கள் எப்போாதும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படாமல் இருக்க நீங்கள் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சேவைகளும் பல்வேறு வழிகளில் நகராட்சி நிர்வாகம் திறம்பட செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கக் கூடிய மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளான பாதாள சாக்கடை, மழைநீர் வடிவால் அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட சாலைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் தரமான குடிநீர் திட்ட மேலாண்மை, குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற ஏழைகள் வாழ்வதற்கு வீடுகள் கட்டிக்கொடுத்தல், சாலையோர வியாபாரிகளின் நலன் காத்தல், வீடு இல்லாதவர்களுக்கு புகழிடம் அமைத்து பராமரித்தல், தனிநபர், சமுதாய கழிப்பிடம் அமைத்தல் என பல்வேறு சேவைகளை நகராட்சி நிர்வாகம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மக்களுக்கு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. அரசின் சார்பில ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை சரியாக செலவிட வேண்டும். அதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in