தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, தமிழ்ச் சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 2020-ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முனைவர் வ.தனலட்சுமிக்கும், இளங்கோவடிகள் விருது நெல்லை கண்ணனுக்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா.சஞ்சீவிராயருக்கும், மறைமலையடிகளார் விருது சுகி.சிவம் அவர்களுக்கும், சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கத்துக்கும், உமறுப்புலவர் விருது நா.மம்மதுவுக்கும், சொல்லின் செல்வம் விருது சூர்யா சேவியருக்கும், கம்பர் விருது பாரதி பாஸ்கருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கும், ஜி.யு.போப் விருது அ.சு.பன்னீர்செல்வத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2021-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது நீதியரசர் சந்துருவுக்கும், தந்தை பெரியார் விருது க.திருநாவுக்கரசுக்கும், தேவநேயப்பாவாளர் விருது முனைவர் கு.அரசேந்திரனுக்கும், பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்துக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான.அலாய்சியஸ் அவர்களுக்கும், சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கும், 2022-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது மு.மீனாட்சிசுந்தரத்துக்கும் வழங்கப்பட்டது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இனம் தமிழினம். தமிழறிஞர்களுக்கு விருது வழங்கியதன் மூலம் என் தமிழ்க் கடமையை செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் விருது வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in