`அனைத்தும் சாத்தியம்' மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

`அனைத்தும் சாத்தியம்' மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

`அனைத்தும் சாத்தியம்' என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த அருங்காட்சியகம், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சியகப்படுத்தும் வகையில் செயல் விளக்க மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை கடந்து தீர்வுகளைக் காணவும் இந்த அருங்காட்சியகம் வழிவகை செய்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலுடன் வசிக்கக்கூடிய “மாதிரி இல்லம்” வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அருங்காட்சியகமானது பயனாளிகள், படைப்பாளிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் சமூகத்துடனான தொடர்புகளை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் எந்தவித தடையுமின்றி வாழும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், ஒன்றுகூடி வாழவும், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் உதவி உபகரணங்களை உபயோகப்படுத்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலையும் பெற இந்த அருங்காட்சியகம் உதவுகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக ரூ.9.50 கோடி மதிப்பில் 7,219 நபர்கள் பயன்பெறும் வகையில், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் ஆகிய 5 வகையான உபகரணங்களில், 36 மாதிரிகளை பயனாளிகள் விருப்பத் தேர்வு முறைக்கு அறிமுகப்படுத்தி, 6 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in