டி.ராஜேந்தரைச் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

டி.ராஜேந்தரைச் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
டி.ராஜேந்தருடன் முதல்வர் உள்ளிட்டவர்கள்

உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து போரூர் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இயக்குநரும் நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விரைவில் அவர் அமெரிக்காவுக்கு மேல்சிகிச்சைக்காக செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த அவரது மகனும், நடிகருமான சிலம்பரசன், தனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனாலேயே மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் பரிசோதனையில் அவரது வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று(மே 29) போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இயக்குநர் டி.ராஜேந்தரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் உடன் சென்றிருந்தனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை திமுகவில் இருந்த டி.ராஜேந்தர் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். எம்ஜிஆரை எதிர்த்து தீவிரமாக திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் அவர். முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் மீது எப்போதும் அன்பும் பாசமும் உண்டு. அதனால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் ராஜேந்தரை மருத்துவமனைக்கே சென்று சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்திருக்கிறார் என்கிறார்கள் திமுகவினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in