மீண்டும் வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற துபாய் எக்ஸ்போவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அபுதாபிக்குச் சென்ற முதல்வர் லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியைச் சந்தித்துப் பேசினார். இதன்படி தமிழகத்தில் ரூ.3500 கோடி அளவிற்கு முதலீடு செய்ய லுலு நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர், “துபாய் பயணத்தின் மூலம் 6 முக்கிய தொழில் நிறுவனங்களுடன் 6100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுமார் 14,700 பேருக்குத் தமிழகத்தில் வேலை கிடைக்கும் என்றார்.

ஸ்டாலின் குடும்பத்துடன் வெளிநாடு பயணம் மேற்கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகின. இதையடுத்து அவர் அரசு செலவில் குடும்ப சுற்றுலா சென்றுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ‘முதலமைச்சர் தனிப்பட்ட நோக்கத்திற்காகத்தான் துபாய் செல்கிறார். கண்காட்சி முடிய போகும் நேரத்தில் ஏன் செல்ல வேண்டும்? அவரின் கவனம் முழுவதும் துபாய் மீதுதான் உள்ளது’ எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்டாலின் மீண்டும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள உள்ளார். ஜூன் இறுதியில் லண்டனுக்கும், ஜூலை மாதத்தில் அமெரிக்காவிற்கும் செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in