`வாழும் கைவினைப் பொக்கிஷம்'- சாதித்த 10 பேரை சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்

`வாழும் கைவினைப் பொக்கிஷம்'- சாதித்த 10 பேரை சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகள், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகள் ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ எனும் விருது வழங்கப்படுகிறது. கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும், அதன்மூலம் திறனை வெளிகொணர்ந்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் இவ்விருது ஆண்டு தோறும் 15 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக இவ்வாண்டு 10 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் மொத்தம் 10 நபர்களுக்கு 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2021-22-ம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகள் ஜி. மாரிமுத்து (தஞ்சாவூர் கலைத் தட்டு), என்.மாரியப்பன் (தஞ்சாவூர் ஒவியம்), ஜி.தங்கராஜ் (வீணை கைத்திறத் தொழில்), பொன்.விசுவநாதன் (பஞ்சலோக சிற்பம்), எம்.இராமலிங்கம் (காகிதக் கூழ் பொம்மை), எம்.முத்துசிவம் (கோயில் நகைகள்), வி.கமலம் (இயற்கை நார் பொருட்கள்), டி.விஜயவேலு (சுடுகளிமண் பொம்மைகள்), எஸ்.பிரணவம் ஸ்தபதி (பஞ்சலோக சிற்பம்), கே.வடிவேல் (கடல் சிப்பி பொருட்கள்) ஆகிய 10 விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

“பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பத்து கைவினைஞர்களுக்கு ஆண்டு தோறும் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் 50,000 ரூபாய் பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழும் கொண்டதாகும்.

அதன்படி, 2021-22-ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை, டி.கதிரவன் (மரச்சிற்பம்), ஏ.தென்னரசு (தஞ்சாவூர் ஓவியம்), எஸ்.சகாயராஜ் (மரச்சிற்பம்), ஆர்.கோபு (பஞ்சலோக சிலை), எஸ்.யுவராஜ் (மரச்சிற்பம்), எஸ்.ராதா (நெட்டி வேலை), டி.நாகப்பன் (கற்சிற்பம்), டி.மகேஸ்வரி (காகிதக் கூழ் பொம்மைகள்), என்.ராஜேந்திரன் (வீணை கைத்திறத் தொழில்), டி.செல்லம்மை (இயற்கை நார் பொருட்கள்) ஆகிய 10 விருதாளர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

Related Stories

No stories found.