புதுவையில் கரோனா அதிகரித்தால் ரங்கசாமியே பொறுப்பு: நாராயணசாமி!

புதுவையில் கரோனா அதிகரித்தால் ரங்கசாமியே பொறுப்பு: நாராயணசாமி!
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்தால் அதற்கு தற்போதைய முதல்வர் ரங்கசாமியே பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இன்று புத்தாண்டை முன்னிட்டு தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “கரோனா தொற்றால் நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது உருமாறிய புதிய வகை தொற்றான ஒமைக்ரானால் இன்னும் அதிகமான பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், புதுச்சேரியில் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஏற்கெனவே கரோனா தொற்றின் முதல் இரண்டு அலைகளில் அதிக அளவில் புதுச்சேரி மக்களை இழந்துள்ளோம்.

இந்த ஒமைக்ரான் தொற்றானது வேகமாகப் பரவக்கூடியது. இந்நிலையில் தேவையே இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பேரில் புதுச்சேரிக்கு பல மாநிலங்களைச் சேர்ந்த மக்களை வரவழைத்து, கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயலாகும்.

புதுச்சேரியில் கரோனா தொற்று இன்னும் அதிகமானால், அதற்கு முதல்வர் ரங்கசாமிதான் பொறப்பேற்க வேண்டும். இதுவரை புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் அது பரவ வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், சுகாதாரத் துறையோ, மாநில நிர்வாகமோ ஒமைக்ரான் வந்தால் மக்களை காப்பாற்றுவதற்கான கட்டமைப்புகளை இன்னும் உருவாக்கவில்லை. புதுச்சேரி அரசு மெத்தனமாகவே இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in