
ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் மற்றும் அபுதாபியில் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இந்த சந்திப்பில், தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்க புதிய ஒப்பந்தகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நடந்து வரும் எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ம் தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. அங்குள்ள தமிழ்நாடு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.