ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்திற்கு வரும்படி அந்நாட்டு அமைச்சர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்தல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஐவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு அமைச்சர்களையும் தமிழகம் வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் குழுவினையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழக அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் சஞ்சய் சுதிர், துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி மற்றும் இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதர் அகமது அல் பன்னா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.