‘நன்றி வணக்கம்’: நீதிபதி சஞ்சீப் பானர்ஜி எழுதிய நெகிழ்ச்சிக் கடிதம்

‘நன்றி வணக்கம்’: நீதிபதி சஞ்சீப் பானர்ஜி எழுதிய நெகிழ்ச்சிக் கடிதம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, சென்னையிலிருந்து இன்று (நவ.17) புறப்பட்டார். முன்னதாக உயர் நீதிமன்றத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்.

பல்வேறு வழக்குகளில் அதிரடியான தீர்ப்புகளையும், அரசு நிர்வாகத்தைக் கண்டிக்கும் விதத்திலான உத்தரவுகளையும் பிறப்பித்தவர், நீதிபதி சஞ்சீப் பானர்ஜி. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என மத்திய, மாநில அரசுகளை அவர் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னையில் சாலைகளை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, 2015-ல் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்குப் பின்னர், சென்னை மாநகராட்சி என்ன செய்துகொண்டிருந்தது எனக் கேள்வி எழுப்பியதும் கவனம் ஈர்த்தது. இதற்கிடையே, 11 மாதங்களிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து, நீதித் துறையிலேயே சலசலப்புகள் எழுந்திருக்கின்றன.

இந்தச் சூழலில், இன்று பிரிவு உபச்சார நிகழ்வைத் தவிர்த்துவிட்டு சென்னையிலிருந்து அவர் புறப்பட்டிருக்கிறார். எனினும், தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் இதயபூர்வமாக நன்றி தெரிவித்து கடிதம் எழுத அவர் தவறவில்லை.

“பதவிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்ய முடியாததற்காக முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவதாக, தனிப்பட்ட முறையில் உங்களிடம் பிரியாவிடை பெற முடியவில்லை என்பதற்காக என்னை மன்னிக்கவும்” எனத் தன்னுடன் பணியாற்றிய நீதிபதிகளைக் குறிப்பிட்டு எழுதியிருக்கும் சஞ்சீப் பானர்ஜி, “எனது நடவடிக்கைகளால் உங்களில் சிலர் புண்பட்டிருக்கலாம். அவை தனிப்பட்ட முறையிலானவை அல்ல. நீதித் துறைக்கு அவை அவசியமானவை என்றே நான் கருதினேன்” என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதேபோல், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் குறிப்பிட்டு, “நாட்டிலேயே சிறந்த பார் உறுப்பினர்களில் நீங்களும் அடக்கம். அதிகம் பேசக்கூடிய, சில சமயம் சிடுசிடுக்கவும் செய்த முதிய நீதிபதியான என்னை, அதிகப் பொறுமையுடனும் மதிப்புடனும் புரிதலுடனும், அனுசரித்துக்கொண்டமைக்கு நன்றி” என்று எழுதியிருக்கிறார்.

“உங்களது பணிகளால் நிர்வாகம் இலகுவாக நடைபெற்றது” என நீதிமன்றப் பதிவாளர்களைப் பாராட்டியிருக்கும் அவர், “நீதிமன்ற நடைமுறைகளை மேம்படுத்துவதில் நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறேன். வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்துவதற்குத் தொடர்ந்து உங்கள் முயற்சியைத் தொடருங்கள்” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கடிதத்தில், “ஆதிக்கக் கலாச்சாரத்தை என்னால் முழுமையாகத் தகர்க்க முடியவில்லை” என்று நீதிமன்றப் பணியாளர்களிடம் அவர் தெரிவித்திருப்பது, நீதித் துறையினரிடையே பரபரப்பாகப் பேசப்படுகிறது.

நிறைவாக, “அழகான, மேன்மைவாய்ந்த இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நானும் என் மனைவியும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்கள் சொந்த மாநிலம் என உரிமையுடன் தமிழகத்தைக் கருதினோம்” என்று கூறியிருப்பதுடன், ‘நன்றி வணக்கம்’ என்று தமிழிலேயே நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார் சஞ்சீப் பானர்ஜி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in