44 கிலோவில் உருவான ‘தம்பி’ இட்லி: செல்ஃபி எடுக்கக் குவியும் இளைஞர்கள்!

44 கிலோவில் உருவான ‘தம்பி’ இட்லி: செல்ஃபி எடுக்கக் குவியும் இளைஞர்கள்!

சென்னையைச் சேர்ந்த இனியவன் என்பவர் தம்பி பொம்மையின் உருவத்தில் 44 கிலோ எடை கொண்ட இட்லியைத் தயாரித்து பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரபலப்படுத்தும் விதமாகக் குதிரை முகத்துடன் கூடிய வேட்டி சட்டை அணிந்து வணக்கம் சொல்லும் வகையில் மனித உருவம் உருவாக்கப்பட்டு அதற்கு ‘தம்பி’ எனப் பெயர் வைக்கப்பட்டது.

தமிழகத்தின் முக்கிய இடங்களில் தம்பி உருவம் நிறுவப்பட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ‘பேரறிஞர் அண்ணா, எல்லோரையும் ‘தம்பி’ என்றுதான் அழைப்பார். சகோதரத்துவத்தின் அடையாளமாக செஸ் ஒலிம்பியாட் சின்னத்துக்கு 'தம்பி' எனப் பெயர் சூட்டியிருக்கிறோம். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்பதே இதன் பொருள்’ எனத் தம்பி உருவத்திற்கு விளக்கம் அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த இனியவன் என்பவர் தம்பி பொம்மையின் உருவத்தில் 44 கிலோ எடை கொண்ட இட்லியைத் தயாரித்து பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளார். தம்பி இட்லி குறித்துப் பேசிய இனியவன், “சிறு தானியங்களைக் கொண்டு இந்த இட்லி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் சிறு தானியங்களை மறந்து துரித உணவுப் பழக்கத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். சிறு தானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் தம்பி உருவத்திலேயே இட்லியை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஒரு இட்லியைத் தயாரிப்பதற்கு 24 மணி நேரம் செலவானது.” என்கிறார்.

கடற்கரை பகுதிக்கு வரும் பொதுமக்கள் இந்த வித்தியாசமான இட்லியைப் பார்த்து தம்பி இட்லியுடன் செல்ஃபி எடுத்துச் செல்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in