சொமோட்டோவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி

10 நிமிடத்தில் உணவு டெலிவரி சர்ச்சையில் நடவடிக்கை
சொமோட்டோவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி

10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையாகியுள்ள நிலையில், சொமோட்டோ நிர்வாக அதிகாரிகளுடன் சென்னை போக்குவரத்து காவல்துறை ஆலோசனை நடத்த உள்ளது.

உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சொமோட்டோ நிறுவனம் சொமோட்டோ இன்ஸ்டன்ட் என்கிற பெயரில் பத்து நிமிடங்களுக்குள் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் நிறுவனர் தீப்பிந்தர் கோயல் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்தும், அதேசமயம் நெட்டிசன்கள் இந்த அறிவிப்பை கிண்டல் செய்தும் பல்வேறு பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக பத்து நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்ற உத்தரவாதம் நடைமுறை சாத்தியமற்றது எனவும் டெலிவரி செய்யும் நபருக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும் எனவும் இதன்மூலம் சாலையில் வாகனத்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், சொமோட்டோ ஊழியர்கள் மட்டுமின்றி சாலையில் செல்பவர்களுக்கும் இதனால் ஆபத்து இருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனை அடுத்து அதற்கு பதில் அளிக்கும் வகையில் பல்வேறு விளக்கங்களையும் அளித்துள்ள சொமோட்டோ நிறுவனர் தீப்பிந்தர் கோயல், ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உணவகங்களுக்கு மட்டுமே இந்த பத்து நிமிட டெலிவரி பொருந்தும் எனவும் அனைத்து ஓட்டல்களிலும் உள்ள அனைத்து உணவுகளும் இந்த பத்து நிமிட டெலிவரி பொருந்தாது எனவும், குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை மட்டும் குறுகிய தொலைவுள்ள ஓட்டல்களில் இருந்து அருகாமையில் உள்ள வாடிக்கையாளருக்கு மட்டுமே இந்த பத்து நிமிட டெலிவரி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

மேலும், தங்களது நிறுவனம் 20 முதல் 30 நிமிடங்களுக்குள் செய்யும் டெலிவரி எவ்வாறு சுமுகமாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ அதே வகையில்தான் இந்த பத்து நிமிட டெலிவரியும் திட்டமிட்டிருப்பதாகவும், ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்குள் தயாராகும் உணவை ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய வாடிக்கையாளருக்கு மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று டெலிவரி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விளக்கங்களில் திருப்தி அடையாத பல சமூக ஆர்வலர்கள் இந்த அறிவிப்பு பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையிடம் கேட்டபோது, இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வரவில்லை. எனினும் எதிர்காலத்தில் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பதை அந்நிறுவனத்திற்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலுள்ள சொமோட்டோ நிர்வாக அதிகாரிகளிடம் இந்த அறிவிப்பு தொடர்பாகவும் இதை எவ்வாறு அவர்கள் செயல்படுத்த உள்ளார்கள் என்பதையும் கேட்டறிவதற்கு விரைவில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கூறுகையில், "அக்கூட்டத்தில் குறிப்பாக டெலிவரி செய்யும் நபர் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனத்தை இயக்கும் நிலைமை ஏற்படும் எனவும் சிக்னலில் நிற்காமல் செல்வது, ஒன்வேயில் செல்வது வேகமாக, அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குவது போன்ற ஆபத்துக்கள் இருப்பதை நிர்வாக அதிகாரியிடம் எடுத்து கூற உள்ளோம். ஒருவேளை இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்து அதனால் ஏதும் விபத்து ஏற்பட்டால் அந்தக் குற்றத்திற்கு சட்டப்படி அந்த நிறுவனமும் உடந்தை என்பதையும் விளக்கி கூறவுள்ளோம்" என்று கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in