`இனி சிறை தண்டனைதான்'- உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

`இனி சிறை தண்டனைதான்'- உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிப்பதே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் விதிமீறல் கட்டிடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறியதாக கூறி தெய்வசிகாமணி என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தெய்வசிகாமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து, பணிப் பயன் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கான பட்டியலில் தெய்வசிகாமணி பெயரை பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால உத்தரவுப்படி பதவி உயர்வுக்கு தனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என தெய்வசிகாமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், விதிமீறல் கட்டிடங்கள் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கையை எதிர்த்து அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனுக்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்குகளில், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளின் செயலுக்கு அபராதம் விதிப்பது இரண்டாவது பட்சமாகத்தான் இருக்க வேண்டும். சிறை தண்டனை விதிப்பதுதான் பிரதானம் என்று எச்சரித்துள்ளனர்.

இதுபோன்ற அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுவரை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றுக்கு ஆணை பிறப்பித்தனர்.

மேலும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது ஐஏஎஸ் பதவியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் மட்டத்தில் இருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்றும் அரசிடம் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பதவியில் நியமிக்கப்படும் அதிகாரிகள், லஞ்சப் பணம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என்று நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் இந்த பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சேர்த்த சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in