சரகர் Vs ஹிப்போகிரட்டஸ்: சரியான உறுதிமொழி யாருடையது?

சரகர் Vs ஹிப்போகிரட்டஸ்: சரியான உறுதிமொழி யாருடையது?

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சரகர் பெயரில் தொழில் உறுதிமொழி எடுத்த விவகாரம் சர்ச்சையாகிருக்கிறது. ஹிப்போகிரடிக் உறுதிமொழி பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் நிலையில் அதை ஏன் மாற்ற வேண்டும் என ஒரு தரப்பினரும், ஹிப்போகிரடிக் உறுதிமொழியை மாற்றி எடுத்தால் அது அரசியல் சட்டத்தையோ வேறு எதையாவதையோ மீறுவதாகிவிடுமா என இன்னொரு தரப்பினரும் பேசிவந்தனர். ஹிப்போகிரட்டஸின் உறுதிமொழிக்குப் பதிலாக சரகரின் பெயரில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம் என்று தேசிய மருத்துவப் பேரவை பரிந்துரைதான் செய்திருந்தது; உத்தரவிடவில்லை. எனினும், அதைச் செயல்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கியது மதுரை மருத்துவக் கல்லூரி!

இந்தப் பிரச்சினையால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ரத்தினவேலுக்கு மதுரை மருத்துவக் கல்லூரியின் டீனாக மீண்டும் பதவி வழங்கப்பட்டுவிட்டது. எனினும், சரகரா, ஹிப்போகிரட்டஸா எனும் சர்ச்சை இப்போதும் தொடர்கிறது.

மருத்துவம் பயின்று தொழில் தொடங்கும் முன்பாக மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தார்மிக நெறிகளையும் கடமைகளையும் நினைவூட்டும் ஒரு உறுதிமொழியே ஹிப்போகிரடிக் உறுதிமொழி. இதில் கிறிஸ்தவ மதம் சார்ந்த நெறிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது என்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள். சரகர் இந்திய தேசத்தில் பிறந்தவர். பல பகுதிகளில் அலைந்து திரிந்து ஆயுர்வேத மருத்துவமுறைகளையும் சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர். தன்னுடைய குருநாதர் தொடங்கிய மருத்துவ நூல் பணியைப் பூர்த்தி செய்தவர். பிற்கால மருத்துவ மாணவர்களுக்குப் பயன்படும் அளவுக்குப் பல தகவல்களைத் திரட்டித் தந்தவர். ஹிப்போகிரட்டஸின் உறுதிமொழி கிரேக்க மொழியிலானது. அதை ஆங்கில வார்த்தைகளில்தான் எழுதிப் படிக்கிறார்கள். சரகருடைய பெயரிலும் அதே ஆங்கில வாக்கியங்களில்தான் சம்ஸ்கிருத உச்சரிப்புடன் எழுதிப் படித்திருக்கிறார்கள் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.

நோயாளி எப்படிப்பட்டவராக இருந்தாலும் சிகிச்சை தர வேண்டும், உயிரைக் காப்பாற்ற கடைசி வரையில் முயற்சி செய்ய வேண்டும், நோயாளிக்குக் கசக்கிறதே என்பதற்காக மருந்தைத் தராமலிருக்கக் கூடாது, நோயின் தீவிரத்தால் பாதிக்கப்படும் நோயாளி அல்லது அவருடைய நெருங்கிய உறவினர்கள் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக விஷத்தைக் கொடுத்து கதையை முடித்துவிடக் கூடாது என்ற நெறிகள் இரண்டிலும் பொதுவானவை. மருத்துவர்கள் நோயாளிகளின் நோய் பற்றிய ரகசியங்களை மற்றவர்களுக்கு அம்பலப்படுத்தக் கூடாது, அரசியல்வாதிகள் சிகிச்சைக்காக வரும்போது சிகிச்சை செய்ய வேண்டுமே தவிர அவர்களைக் கொன்றுவிடக் கூடாது என்கிறது ஹிப்போகிரட்டஸின் உறுதிமொழி.

அலோபதி படித்துவிட்டு ஆயுர்வேத வைத்தியர் பெயரில் உறுதிமொழி எடுத்ததா, காலம்காலமாக கிரேக்க மொழியில் உறுதிமொழி எடுத்தவர்கள் திடீரென சம்ஸ்கிருதத்துக்கு மாறியதா எதற்கு தமிழக அரசு இதை இவ்வளவு கடுமையாகக் கருதுகிறது என்று புரியவில்லை. தேசிய கீதம் என்று தாகூரின் ஜனகன மண இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்தும் அவசியம் என்று உணர்ந்து தமிழ் மரபுக்கேற்ப அதைக் கொண்டுவந்தது தமிழக அரசு. மேலை நாட்டு மருத்துவத்துக்கு இணையான மருத்துவ நூல்களும் அறிஞர்களும் இந்தியாவிலும் உண்டு என்பதை உணர்த்த சரகரின் பெயரில் உறுதிமொழியை எடுக்கலாம் என்கிறது ஒன்றிய அரசு. ஆப்பிரிக்கத் தலைவர் ஒடிங்காவின் மகளுக்கு ஏற்பட்ட முழுப் பார்வைக் குறைவை சரி செய்ய முடியாது என்று அலோபதி மருத்துவம் கைவிரித்தபோது, கேரள ஆயுர்வேதம்தான் அப்பெண்ணின் பார்வையை மீட்டுத் தந்தது. இந்த மருத்துவ முறையின் பெருமையை உலகறியச் சொல்லுங்கள் மோடி என்று ஒடிங்கா, டெல்லி சென்று அவரிடம் நேரிலேயே வலியுறுத்தினார்.

என்ன இருந்தாலும் சுதேசி மருத்துவமுறை மேலை நாட்டு மருத்துவ முறைக்கு ஈடாகாது என்ற தாழ்மை உணர்ச்சியா அல்லது வடவரின் ஆதிக்க முயற்சி என்ற கோப உணர்வா, எது இதற்கெல்லாம் காரணம் என்று தெரியவில்லை. இருவரும் மருத்துவத்துக்கு அரிய தொண்டு செய்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்துவிட்டனர். இந்த சர்ச்சை நமக்கு வேண்டாம். அவர்களைப் பற்றி அறிய நமக்குக் கிடைத்த ஒரு தருணமாக மட்டும் இதைப் பார்ப்போம்.

ஹிப்போகிரட்டஸின் உறுதிமொழி

கிரேக்க மருத்துவ நூல்களில் இடம் பெற்றுள்ள உறுதிமொழி இது. நோய்களைக் குணப்படுத்தக்கூடிய கடவுளர்கள் என்று கிரேக்கர்கள் நம்பிய வெவ்வேறு கடவுளர்கள், தேவதைகளின் பெயர்களால் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மருத்துவத் தொழிலுக்கு வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய தார்மிக நெறிகள் பற்றியது இந்த உறுதிமொழி. அதில் முக்கியம் நோயாளியின் நோய் பற்றிய விவரங்களைப் பிறர் அறிய பகிரங்கப்படுத்தாமல் இருப்பது. தீய நோக்கமின்றி மருத்துவப் பணியைச் செய்வது. பல்வேறு நாடுகளிலும் இது நடைமுறையில் இருப்பதால் இதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தும் ஏற்பட்டிருக்கிறது. இந்த உறுதிமொழியை மீறி நடந்த மருத்துவரைத் தண்டிக்கலாம் என்று சட்டங்கள் கூறுகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாக ஐந்தாவது அல்லது மூன்றாவது நூற்றாண்டில் இது தொடங்கியது. ஹிப்போகிரட்டஸின் பெயரில் இதை அழைத்தாலும், அவர்தான் இதை எழுதினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்கின்றனர் நவீன வரலாற்றாசிரியர்கள்.

“நோய்களைக் குணப்படுத்தக்கூடிய அப்பல்லோ, ஆசில்பியஸ், ஹைஜீயா, பனாஷியா ஆகிய தெய்வங்கள் – தேவதைகள் பெயரால் சத்தியப் பிரமாணம் செய்கிறேன். என்னுடைய திறமை, மருத்துவக் கூராய்வுக்கேற்ப சிகிச்சை அளிப்பேன் என்று சாட்சிகள் முன் உறுதியளிக்கிறேன். எனக்கு இந்தக் கலையைக் கற்றுத்தந்த ஆசிரியரை என்னுடைய பெற்றோருக்குச் சமமாகக் கருதுவேன். என்னுடைய வாழ்வாதாரங்களை அவர்களுடன் பகிர்வேன். அவருக்குப் பணம் தேவைப்பட்டால் தருவேன். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களை என்னுடைய சகோதரர்களாக நடத்துவேன். அவர்கள் விரும்பினால் இந்த மருத்துவக் கலையைக் கற்றுத்தருவேன். என்னுடைய நோயாளிகளுக்கு நலன் பயக்கக் கூடிய ஆகாரங்களை மட்டுமே பரிந்துரைப்பேன். அவர்களுக்கு தீங்கோ, அநீதியோ இழைக்க மாட்டேன். யார் கேட்டுக் கொண்டாலும் என்னுடைய நோயாளிகளுக்கு விஷத்தைக் கொடுக்க மாட்டேன். வலிதாங்க முடியாத நிலையிலும் அப்படியான வழிகளைப் பரிந்துரைக்க மாட்டேன். கருவைச் சிதைக்கும் மருந்துகளை எந்தப் பெண்ணுக்கும் தர மாட்டேன். சிகிச்சைக்கு வரும் சிறுமிகளையும் பெண்களையும் கண்ணியமாக நடத்துவேன். என்னுடைய சொந்த வாழ்க்கையையும் மருத்துவக் கலையையும் தூய்மையாக வைத்துக்கொள்வேன். நோயால் அவதிப்படும் எவருடைய வீடுகளுக்குள்ளும் பேதம் பாராமல் நுழைந்து சிகிச்சை அளிப்பேன். ஆண் – பெண், சுதந்திரமானவர்கள் – அடிமைகள் என்று எவருடைய உடல்களையும் அவமதிக்கமாட்டேன். சிகிச்சையின்போதோ, மருத்துவத் தொழில் தொடர்பான பயணங்களின்போதோ நான் அறியும் மருத்துவ ரகசியங்களை – அதிலும் குறிப்பாக வெளியில் சொல்லக்கூடாதவற்றை எவரிடத்தும் பகிரவோ பதிப்பிக்கவோ மாட்டேன். இந்த உறுதிமொழியைக் கடைப்பிடித்து பெயரும் புகழும் பெறுவேன். இதற்கு மாறாக நடந்தால், அதற்குண்டான கெடுபலன்கள் எனக்கு நேரட்டும்” என்பது இந்த உறுதிமொழியின் சுருக்கம். ‘முடிந்தால் நோயாளிக்கு உதவி செய் – இல்லாவிட்டால் தீமை செய்யாமலாவது இரு’ என்பது ஹிப்போகிரடிக் சீடர்களுக்கான முக்கிய அறிவுரை. இதை எழுதியது ஹிப்போகிரட்டஸ் அல்ல பித்தாகரஸர்கள் (Phythogorean) என்பது லுட்விக் எடல்ஸ்டெய்ன் என்ற அறிஞரின் ஊகம்.

இந்த உறுதிமொழி தொடர்பாக வெவ்வேறு கருத்துகளும் உலவுகின்றன. உறுதிமொழியில் இடம் பெற்றுள்ள வாசகம் ஒன்று, கத்தியைப் பயன்படுத்த மாட்டேன் என்கிறது. மருத்துவர் எப்படி கத்தியைப் பயன்படுத்தாமல் கட்டிகளை அகற்றுவது, அறுவை சிகிச்சை செய்வது? அதற்கு விளக்கம் என்னவென்றால் அரசியல் காரணங்களுக்காக, சிகிச்சைக்கு வரும் பிரமுகர்களைக் கொல்ல மாட்டேன் (கத்தியைத் தவறாகப் பயன்படுத்தமாட்டேன்) என்று மறைமுகமாக உறுதி கூறுவது என்கிறார்கள்.

கருணைக் கொலையைச் செய்ய மாட்டேன் என்பதுதான், நோய் முற்றிய நிலையில் இருப்பவருக்கு விஷம் கொடுக்க மாட்டேன் எனறு கூறும் உறுதிமொழி என்கிறார்கள். கருத்தடை அல்லது கருச்சிதைவு செய்ய மாட்டேன் என்பது மற்றொரு உறுதிமொழி. ஆனால் ஹிப்போகிரட்டஸோ தனது மருத்துவ நூலில் கருச்சிதைவை எப்படி செய்ய வேண்டும் என்று விரிவாக விவரிக்கிறார். மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்பவர்கள் ஏன் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் என்ற கேள்வி எழக்கூடும். இந்த உறுதிமொழியில் கிறிஸ்தவ மத செல்வாக்கு காரணமாக பல பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்கிறார்கள் சிலர்.

சரக சம்ஹிதை

சரக சம்ஹிதை என்பது மருத்துவ நூல். சரகரின் குருநாதர் அக்னிவேஷர் இயற்றிய மருத்துவ நூலைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இந்த சம்ஹிதை. சரகருக்குப் பிறகு ஆயுர்வேத சிகிச்சை முறையில் சிறந்து விளங்கிய த்ருடபலர் இந் நூலைப் பூர்த்தி செய்திருக்கிறார்.

சரகர் என்ற சொல்லுக்கு மூல சம்ஸ்கிருதச் சொல் ‘சர’. சர என்றால் ‘தேடி அலைதல்’. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கையாளப்பட்ட ஆயுர்வேத சாஸ்திரங்களையும் சிகிச்சை முறைகளையும் அவர் தேடித் தொகுத்திருக்கிறார் என்றும் கருதலாம். இந்த நூலில் மொத்தம் எட்டுப் பிரிவுகள், 120 அத்தியாயங்கள். மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்பதால் 120 அத்தியாயங்களில் எழுதியிருக்கிறார். முப்பது வகையிலான பெரிய நோய்களை அடையாளம் கண்டு விவரித்திருக்கிறார். மரங்கள், செடிகள், கனிகள், காய்கள், பூக்கள், வேர்கள், கொடிகள், உலோகம், அலோகம் என்று பலவற்றிலிருந்தும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

நோய்க்குக் காரணமானவை எவையென்று ஆயுர்வேதம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. நோய் ஏற்பட்டுவிட்டால் அதைத் தீர்ப்பதற்கும் நோய் வராமலிருப்பதற்கும் வழிகளைக் கூறுகிறது. நோய்களின் அறிகுறிகளை அழகாக விவரிக்கிறது. மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகளைக் கொண்டதால் ஆயுர்வேதம் என்று அழைக்கப்படுகிறது. இது தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. நோய்க்கான காரணங்களாக நோயாளி வாழும் பகுதியைச் சேர்ந்த மண், காற்று, அவர் உண்ணும் உணவு, இதர பழக்க வழக்கங்கள் என்று அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. வெவ்வேறு பருவகாலங்களில் ஏற்படக்கூடிய நோய்கள், தீவிரமடையவல்ல நோய்கள், குணமாகக் கூடிய நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வாத, பித்த, கபம் காரணமாகவும் அவற்றின் விகிதாச்சாரங்கள் வரம்பை மீறும்போது ஏற்படக்கூடிய வாதனைகளையும் விளக்கவல்லது ஆயுர்வேதம். மனிதர்களுடைய வெவ்வேறு வயதுகளில் உடலில் ஏற்படக்கூடிய வளர்சிதை மாற்றங்களையொட்டிய நோய்களும்கூட விவரிக்கப்பட்டுள்ளன.

சரக சம்ஹிதை, சுசுருத சம்ஹிதை, அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற மூன்றும் ஆயுர்வேதத்தின் முப்பெரும் நூல்கள். ஆயுர்வேதத்தில் ‘சஸ்திர சிகிச்சை’ என்று அழைக்கப்படும் அறுவை சிகிச்சையும் உண்டு. இதில் சிறந்து விளங்கிய சுஸ்ருதரின் மருத்துவ அறிவைக் கண்டு வியந்து அலோபதி (ஆங்கில முறை அல்லது நவீன முறை) மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு போடும் தையலுக்கே ‘சூச்சர்’ என்று அவருடைய நினைவாகப் பெயர் சூட்டியுள்ளனர். வட இந்தியாவிலும் கேரளத்திலும் ஆயுர்வேதம் என்று அழைக்கப்படுவதற்கு இணையானது தமிழர்களின் சித்த வைத்தியம். இதைப் போன்றதே இஸ்லாமியர்களின் யுனானி. சரகரின் பெயரில் உறுதிமொழி ஏற்பதற்குப் பதிலாக அகஸ்தியர் பெயரில்கூட புதிதாக நாம் சித்த வைத்திய உறுதிமொழி ஏற்கலாம், தவறில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in