தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

"வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 18ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

நேற்று காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19-ம் தேதி காலை நிலவக்கூடும். இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது வரும் 21-ம் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22-ம் தேதி காலை நிலைபெறக்கூடும்.

இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளில் கடல் சீற்றதுடன் காணப்படும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in