ராமஜெயம் கொலை வழக்கு: 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை என்று தெரியுமா?

கே.என். ராமஜெயம்
கே.என். ராமஜெயம்

திமுக முதன்மைச் செயலாளரும்,  தமிழக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் தமிழகத்தில் பிரபலமான  12 ரவுடிகளிடம்  உண்மை கண்டறியும் சோதனை  நடத்தப்பட உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கே என் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012  மார்ச் 29ல் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர வைத்தது. இது தொடர்பான வழக்கு திருச்சி மாநகர போலீஸார், சிபிசிஐடி, சிபிஐ என பல கட்டங்களில் நகர்ந்து இறுதியில் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களாக விசாரணையை துரிதப்படுத்திய சிறப்பு புலனாய்வு குழு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையிலான போலீஸார்  ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சிறைக்கு வெளியில் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், இவ்வழக்கில் 20 பேர் அடங்கிய இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் முக்கிய விசாரணை நகர்வு கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்தது. இதில்  சில ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டு அதுகுறித்து  ஆலோசிக்க  சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி வந்திருந்தார்.

அவரது  ஆலோசனையின் விளைவாக  20 பேரில் இருந்து இறுதி கட்டமாக 12 பிரபல ரவுடிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரபல ரவுடிகளான திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திருச்சி சாமி ரவி, சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கின்ற லட்சுமி நாராயணன், தேன்கோவன் என்ற சண்முகம், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன் உள்ளிட்ட 12 நபர்களின் பட்டியலை சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி மதன் ஆய்வாளர் ஞானசேகர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு  வெளியிட்டுள்ளது.

இந்த 12 பிரபல ரவுடிகளையும் சிறப்பு புலனாய்வு  குழுவினர்  தங்கள் கட்டுப்பாட்டில்  வைத்திருப்பதாக கூறப்பட்டாலும், அவர்களுக்கு முறைப்படி நீதிமன்றம் மூலமாக நாளை நவம்பர் 1ம் தேதியன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அனுமதி பெற்று  ஓரிரு நாளில் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது என  சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு நாளை மாலை அல்லது நாளை மறுதினம் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படலாம் என தெரிகிறது. இந்த உண்மை கண்டறியும் சோதனையில் ராமஜெயம் கொலை வழக்கு கொலையாளிகள் யார் என்பது தெரிய வரும்  என  காவல்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in