கோடநாடு வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி டிஜிபி, சிறைத்துறை டிஜிபி இன்றுடன் பணி ஓய்வு

கோடநாடு வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி டிஜிபி, சிறைத்துறை டிஜிபி இன்றுடன் பணி ஓய்வு

கோடநாடு வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி டிஜிபி மற்றும் சிறைத்துறை டிஜிபி இருவரும் இன்றுடன் பணிஓய்வு பெறுகின்றனர்

தமிழகத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்ட கோடநாடு கொலை வழக்கு, அதிமுக அலுவலக கலவரம், திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு என பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஜிபி-யான ஷகில் அக்தர் மற்றும் தமிழக சிறைத்துறை டிஜிபி-யான சுனில்குமார் சிங் ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.

யார் இந்த டிஜிபி ஷகீல் அக்தர்?

பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஷகீல் அக்தர் 1989-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். தர்மபுரியில் ஏஎஸ்பி-யாக பணியைத் தொடங்கிய இவர், தமிழக சிறப்பு காவல்படை கமாண்டண்டாகவும், சிவகங்கை எஸ்பி-யாகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்பி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார். சென்னை போக்குவரத்து வடக்கு துணை ஆணையராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைவருக்கு சிறப்புப் பாதுகாப்பு பணியிலும், இந்திய உள்நாட்டு விவகார அமைச்சருக்கு தனி செயலாளராகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.

காஞ்சிபுரம் மாவட்ட டிஐஜி, நிர்வாக பிரிவு ஐஜி, போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர், தலைமையிட ஐஜி, தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டிஜிபி, சிறப்பு காவல்படை கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த ஷகில் அக்தர், 2002- ம் ஆண்டு மதுரை துணை ஆணையராக இருந்த போது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த அல் உம்மா தீவிரவாதியான இமாம் அலி உட்பட 5 பேரை பெங்களூரில் வைத்து என்கவுண்டர் செய்தவர்.

ஷகில் அக்தர்
ஷகில் அக்தர்

இந்த என்கவுண்டருக்குப் பிறகு தீவிரவாதிகள் மிரட்டலால் ஷகில் அக்தருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்த போது அவருக்கு பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக டெல்லியில் பணியாற்றியுள்ளார். சிறப்பாக பணியாற்றியதற்காக மூன்று முறை ஜனாதிபதி விருதைப்பெற்ற ஷகில் அக்தர், பின்னர் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வரும் முக்கிய வழக்கான கோடநாடு வழக்கு, அதிமுக அலுவலக கலவர வழக்கு, ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தார்.

டிஜிபி சுனில்குமார் சிங்:

1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சுனில் குமார் சிங், நீலகிரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்பி-யாகவும், ராமநாதபுரம், திருச்சி, மதுரை சரக டிஐஜி-யாகவும், திருச்சி, சேலம், திருநெல்வேலியில் கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு சென்னை தலைமையிட கூடுதல் கமிஷனராகவும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி-யாகவும் பணியாற்றினார். தற்போது சிறைத்துறை டிஜிபி-யாக சுனில் குமார் சிங் பணியாற்றி வருகிறார்.

சுனில் குமார் சிங்
சுனில் குமார் சிங்

புதுக்கோட்டை எஸ்பி-யாக சுனில் குமார் சிங் பணியாற்றிய போது இவரது தீவிர நடவடிக்கையால், கொடிக்கட்டிப் பறந்த கள்ளச்சாராயம் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்பட்டன. அதே போல கூடுதல் டிஜிபி-யாக சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் சுனில் குமார் சிங் பணியாற்றிய போது தான் முதன்முறையாக ஆன்லைன் மூலமாக ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in