ஜெயக்குமார் மீது திருச்சியிலும் வழக்குப் பதிவு

ஜெயக்குமார் மீது திருச்சியிலும் வழக்குப் பதிவு
திருச்சியில் கட்சிக்காரர்கள் மத்தியில் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, வேலுமணி வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அது ஏற்கப்படாத நிலையில் அதிமுகவினர் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், அதன் பின்னர் வெளிநடப்புச் செய்தனர்.

எந்த ஜெயக்குமாருக்காக அதிமுகவினர் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்களோ, அதே ஜெயக்குமார் மீது, அதே நேரத்தில் திருச்சியிலும் இன்னொரு வழக்கு பதிவு செய்து பதிலடி கொடுத்து இருக்கிறது திமுக அரசு. திமுக தொண்டரை தாக்கியது உள்ளிட்ட வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் பெற்று திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்திட்டு வருகிறார் ஜெயக்குமார்.

அப்படி வரும்போது அவருடன் அதிக அளவில் அதிமுக தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது போலீஸாருக்கு சவாலாக இருந்து வந்தது. கடந்த 14 மற்றும் 16-ம் தேதிகளில் கையெழுத்திட வந்த ஜெயக்குமாருடன் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்கள் எழுப்பும் முழக்கங்களும் பணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக இருந்தது.

அதனால் இன்று அவர்களை உள்ளே அனுமதிக்காத அளவுக்கு தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர் போலீஸார். அப்படியும் அவர்களுடன் அதிக அளவில் தொண்டர்கள் வந்திருந்தனர். கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்த ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதனையடுத்து கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் மீறியது, சட்டவிரோதமாக கூடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளில் ஜெயக்குமார் மற்றும் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி உள்ளிட்டவர்கள் மீது கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அங்கே சென்னையில் அவருக்கு ஆதரவாக கட்சித் தலைமை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்திருக்கும் நிலையில் இங்கே அவர்மீது இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.