கடல் காற்று மின்சாரத் தயாரிப்பில் தமிழகம் சாதிக்க முடியுமா?

கடல் காற்று மின்சாரத் தயாரிப்பில் தமிழகம் சாதிக்க முடியுமா?

தொழில் துறையில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. தொழில் உற்பத்திக்கு மின்சாரம் அவசியம். தமிழ்நாடு பிற மாநிலங்களிலிருந்து பெறும் மின்சாரம் மூலம்தான் தேவையை ஈடுகட்டுகிறது. மின்மிகை மாநிலமாக ஆவதற்கு, மேலும் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. புதிது புதிதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதால், மின்சார உற்பத்தியிலும் அதற்கேற்ப முதலீடு பெருக வேண்டும்.

அனல் மின் நிலையங்கள் மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், நெய்வேலி ஆகிய ஊர்களில் உள்ளன. குந்தா, காடம்பாறை, மேட்டூர், பெரியாறு, சுருளியாறு, வைகை (மூன்றும் தேனி மாவட்டம்) ஆகிய ஊர்களில் நீர் மின் நிலையங்கள் உள்ளன. கதவணை மின் நிலையங்கள் குதிரைக்கால் மேடு, ஊராட்சிக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ளன. அணு மின் நிலையங்கள் கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவற்றில் உள்ளன. சிவகங்கையில் இப்போதுதான் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நெல்லை மாவட்டம் கயத்தாறு, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தேனி, பாலக்காட்டு கணவாய்ப் பகுதி ஆகிய இடங்களில் உள்ளன.

தரையில் காற்று பலமாக வீசும் இடங்கள் குறைவு. கடற்கரையோரத்தில் காற்றின் வேகம் அதிகம், தரையைவிட அதிக மணி நேரம் அல்லது நாட்களுக்குக் காற்று வீசும். இந்தியாவின் கடற்கரையோர நீளம் 7,600 கி.மீ. இதிலிருந்து 140 கிகா வாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இதில் தமிழ்நாடும் குஜராத்தும் சேர்ந்து 51 கிகா வாட் தயாரிக்க முடியும். ஆனால், இரு மாநிலங்களிலுமே இந்த திட்டம் இன்னமும் எழுச்சி பெறவில்லை.

நிலத்தில் காற்றாலை நிறுவ நிறைய நிலம் தேவை. சில வேளைகளில் சுற்றியுள்ளவர்கள் ஆட்சேபிக்கவும் வாய்ப்பிருக்கிறது. கடலில், கரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவுக்குள் காற்றாலைகளை நிறுவினால் எதிர்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும். இடத்தை விலைக்கு வாங்குவது அல்லது கையகப்படுத்துவது எளிது. நிலத்தில் உள்ள காற்றாலைகளால் அதிகபட்சம் 35 சதவீத அளவுக்குத்தான் காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். கடலில் என்றால் 50 முதல் 55 சதவீதம் வரை தயாரிக்கலாம்.

ஆனால் நிலத்தைவிட கடலில் காற்றாலை நிறுவ நல்ல வலுவுள்ள காற்றாடிகள் தேவை. அங்கு தயாராகும் மின்சாரத்தை நிலத்துக்குக் கொண்டுவர கடலுக்கடியில் கம்பிவடம் பதிக்கப்பட வேண்டும். தொடக்கத்தில் இந்தச் செலவு அதிகம் போலத் தெரிந்தாலும் போகப்போக இதுவே மலிவாகிவிடும். ஆனால், நிலத்தில் காற்றாலைகள் மூலமும் சூரிய ஒளி தகடுகள் மூலமும் மின்சாரம் தயாரிக்க, இதைவிடச் செலவு குறைவாகவே இருக்கும் என்பது உண்மையே.

ஆரம்பகாலத்தில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்பதாலும் அரசு அதற்குக் கடனுதவி திட்டம் எதையும் வைத்திருக்கவில்லை என்பதாலும் தொழில் முனைவோர் ஆர்வம் காட்டவில்லை. அதைவிட முக்கியம் தயாராகும் மின்சாரத்தை, உற்பத்தியாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தொடக்க காலத்தில் வாங்கினால்தான் அவர்களுக்கு லாபம் கிடைத்து உற்சாகம் ஏற்படும். தனியார் வராவிட்டால் அரசுதான் இதில் முதலீடு செய்தாக வேண்டும். அரசோ, தனியாரோ கடல் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடிவெடுத்துவிட்டால் அதற்கான காற்றாடிகளின் இறக்கைகள், கேபிள்கள் ஆகியவற்றின் தயாரிப்பையும் உள்நாட்டிலேயே, அதுவும் அவற்றுக்கு அருகிலேயே தொடங்கி உதவ முடியும்.

கடலில் காற்றாலைகளை நிறுவினால், அவை கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யவும் வலசை போகவும் இரை தேடவும் இடையூறாக இருக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். அதில் இருக்கும் சாதகபாதகங்களை அலசிய பின்னரே, இந்தத் திட்டத்தில் இறங்க வேண்டும். கரிப்புகை வெளியிடாத வகையில் மின்னாற்றல் தயாரிக்க இந்தத் திட்டம் அவசியம் என்பதை விளக்கிய பிறகு இதை மேற்கொள்ள வேண்டும். கிளாஸ்கோ மாநாட்டில், கரிப்புகை வெளியீடு தொடர்பாக பிரதமர் மோடி திட்டவட்டமான உறுதிமொழியைத் தரவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தப்படுவது நியாயமே. ஆனால், மின்சார உற்பத்தியில் உள்ள இடர்ப்பாடுகளைப் பார்க்கும்போது மேலும் சில ஆண்டுகளுக்கு அனல் மின்நிலையங்களைத்தான் மாநில அரசுகளும் மத்திய அரசும் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

கடலில் காற்றாலை நிறுவும்போது அருகிலேயே கடல் நீரைக் குடிநீராகச் சுத்திகரிக்கும் நிலையம், ஹைட்ரஜன் தயாரிப்பு நிலையம் ஆகியவற்றையும் நிறுவலாம். இதனால் ஒரே இடம் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் என்றும் சிலர் யோசனை கூறுகின்றனர். முதலில், கடல் காற்று மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்து அரசுகள் தீவிரமாகச் சிந்திக்கட்டும். பிறகு, அங்கே கூடுதலாக என்னென்ன தொழில்களைச் செய்ய முடியும் என்று பார்க்கலாம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் ஆர்வமாக இருப்பதால், இதையும் சேர்த்துப் பரிசீலிப்பது பொருத்தமாக இருக்கும். இதற்குத் தேவைப்படும் நிதி, தொழில்நுட்ப உதவிகளை வெளிநாடு வாழ் தமிழர்களிடமிருந்துகூட கேட்டுப் பெறலாம் அல்லது தமிழ்நாட்டிலேயே மக்களிடமிருந்து நிதி திரட்டி இதைத் தொடங்கலாம்.

‘கடலோரம் வீசிய காற்று, கரன்டாகிப்போனது இன்று’ என்று நாம் புதிய வரலாறு படைக்க முடியும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in