
சென்னையில் நேற்று இரவு 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுக் கூட்ட'த்தை அனுமதியின்றி நடத்தியதாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தியாகராய நகர் பென்ஸ்பார்க் ஹோட்டலில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுக் கூட்டம் நேற்று மாலை நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலை கழக அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மேலும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஈழத்தமிழர்கள் இணைய வழியாகப் பங்கேற்றனர். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேராசிரியர் ராமசாமி, நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமரான வி.உருத்திரகுமாரன் ஆகியோர் இணைய வழியாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த மயிலாப்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார், கூட்டம் நடத்த அனுமதி இல்லை எனக் கூறினர். ஆயினும் எதிர்ப்பை மீறி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த செந்தில், ஊடகவியலாளர்கள் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.