திருப்பூரில் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்: தடுப்பணை நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சி!

திருப்பூர் நல்லம்மன் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு
திருப்பூர் நல்லம்மன் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நல்லம்மன் கோயிலுக்குச் செல்லும் பாலம் மூழ்கியுள்ளது.

திருப்பூர் அடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் நடுவே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கு சோழர்களால் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

அப்போது நல்லம்மாள் என்ற சிறுமி உயிர் தியாகம் செய்ததால், அவரது நினைவைப் போற்றும் வகையில், நல்லம்மன் என்ற பெயருடன் கோயில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து வழிபாடுகள் நடத்திச் செல்வது வழக்கம்.

நல்லம்மன் கோயிலுக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தால் மூழ்கியது
நல்லம்மன் கோயிலுக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தால் மூழ்கியது

இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நல்லம்மன் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கோயிலுக்குச் செல்லும் சிறு பாலம் ஆற்று நீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வறண்டிருந்த திருப்பூர் நொய்யல் ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு புதுவெள்ளம்
வறண்டிருந்த திருப்பூர் நொய்யல் ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு புதுவெள்ளம்

கோயிலுக்குள் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், மேலும் நீர்வரத்து அதிகரித்தால் கோயில் முற்றிலும் மூழ்கும் நிலை உருவாகியுள்ளது.

பல ஆண்டுகளாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து குறைந்து, எப்போதும் வறண்டே காணப்பட்ட நிலையில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கை ஏராளமானோர் பார்த்து விட்டு செல்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in