`5-ம் வகுப்பு வரை காலை நேர சிற்றுண்டி'- மாணவர்களுக்கு முதல்வரின் முத்தான மூன்று அறிவிப்புகள்

`5-ம் வகுப்பு வரை காலை நேர சிற்றுண்டி'- மாணவர்களுக்கு முதல்வரின் முத்தான மூன்று அறிவிப்புகள்

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தமிழக முதல்வர் இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய தமிழக முதல்வர், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலையில் சாப்பிடுவதில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருக்கிறது என்ற காரணத்தினால் மட்டுமல்ல. சிலர் குடும்பச் சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு சில திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவு செய்யப்படும்.

ஊட்டச் சத்துக் குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் இரண்டாவது திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தில் கிடைத்த தகவல் மிகமிக மன வேதனை தருவதாக இருக்கிறது. தமிழகத்தில் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பரிசோதனை செய்ததில், அதில் பெரும்பாலானவர்கள் ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். வயதுக்கேற்ப எடை இல்லை. வயதுக்கேற்ப உயரம் இல்லை. மிக மிக மெலிதாக இருக்கிறார்கள். உடலில் உறுதி இல்லாவிட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிவிடும் என்பதை உணர்ந்து இதற்கென ஒரு திட்டத்தைத் தீட்ட நான் ஆலோசனைக் கூறினேன்.

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்க்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய இருக்கிறோம். மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச் சத்து தேவைப்படும் குழந்தைகளுக்குச் சிறப்பு ஊட்டச்சத்து அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குழந்தைகள் பயன் அடைவார்கள். தமிழக குழந்தைகள் அனைவரையும் திடமான ஊட்டச் சத்துக் குறைபாடு இல்லாத குழந்தைகளாக மாற்றும் திட்டமாக இதனை வடிவமைத்து இருக்கிறோம்.

மூன்றாவது திட்டமாக ஸ்கூல்ஸ் ஆஃப் எக்சலன்ட்ஸ் என்ற திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். கடந்த ஏப்ரல் மாதத்தில் டெல்லி சென்ற போது டெல்லி அரசு சார்பில் நடத்தப்படும் மாதிரிப் பள்ளியைப் பார்வையிட்டேன். இந்த திட்டம் குறித்து டெல்லி முதல்வர் என்னிடம் விரிவாகப் பேசினார். இதுபோல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என நான் சொல்லியிருந்தேன். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்சலன்ட்ஸ் பள்ளிகள் உருவாக்கப்படும். முதற்கட்டமாக 150 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சிகளில் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு சீரமைக்கப்படும். அனைத்து கட்டடங்களும் நவீன மயமாக்கப்படும். மாணவர்கள் கற்றல் செயல்பாடு அளிக்கும் அதே நேரத்தில் கலை, இலக்கியம், இசை, நடனம், சிற்பம், செய்முறை அறிவியல், விளையாட்டு என அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் பள்ளிகள் உருவாக்கப்படும். மாணவர்கள் தனித்திறமைகள் வளர்த்தெடுக்கப்படும். இந்த திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவு படுத்தப்படும்" என்றார்.

ஐந்து வயது வரை பள்ளி மாணவர்களுக்குப் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படாது எனத் தமிழக அரசு அறிவித்த நிலையில் இந்த திட்டமும் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in