பாஜக அலுவலகத்தில் திருமாவிற்காக காத்திருக்கும் புத்தகங்கள்: அண்ணாமலை போட்ட லிஸ்ட்!

பாஜக அலுவலகத்தில் திருமாவிற்காக காத்திருக்கும் புத்தகங்கள்: அண்ணாமலை போட்ட லிஸ்ட்!

சென்னை பாஜக அலுவலகத்தில் திருமாவளவனுக்காக புத்தகங்கள் காத்திருப்பதாக அவற்றின் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் ட்விட்டரில் யுத்தமே நடந்து வருகிறது. இதற்கு காரணம் அண்ணாமலை ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சாகும்.

கடந்த 20-ம் தேதி பாஜக அலுவலகமான கமலாலயத்தில் 'பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் - புதிய இந்தியா 2022' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, " மோடியை அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா? நான் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளேன்" என்று பேசி சர்ச்சையைத் துவக்கி வைத்தார்.

இதற்குப் பதில் கொடுத்த திருமாவளவன்," அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம்" என்றார்.

இதன் தொடர்ச்சியாக இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் ஒன்றை விடுத்தார். அதில், '' ஏப்ரல் 24-ம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா? நேரில் விவாதம் செய்ய வேண்டும். அம்பேத்கரின் தொகுப்பு நம்பர் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, '' ஏப்ரல் 24- ம் தேதி பிஸியாக இருப்பதால், ஏப்ரல் 26-ம் தேதி நேரில் சந்திக்கலாம் என்றும் தெரிவித்துடன் ஒரு ட்விட்டர் பதிவையும் வெளியிட்டார். அதில், " அண்ணன் திருமாவளவனின் இடதுகை, வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை ஏப்ரல் 26- ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். அதன் பின்பு திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும். தயாராக சொல்லும் இடத்திற்கு வருகிறேன். அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர, சகோதரிகளை நமது பாஜக அலுவலகத்திற்கு 26-ம் தேதி வரவேற்கி்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ''பாஜக தமிழகத் தலைவருக்கு, புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழனிடம் கூறியுள்ளேன். எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும். அண்ணாமலை இதுவரை 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்திருக்கிறார் எனும்போது அவற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களும் இருக்கலாம். எனினும் அவருக்குத் தேவையெனில் அம்பேத்கரின் நூல்களை அஞ்சலில் அனுப்பி வைப்போம். அல்லது அவர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளட்டும்'' என பதிவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக திருமாவளவன் கையெழுத்திட்டு அண்ணாமலைக்கு கொடுத்தனுப்ப தயார் நிலையில் இருக்கும் 5 புத்தகங்கள் விவரத்தையும் விசிகவினர் சமூக ஊடங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில், பெரியார் இன்றும் என்றும், அம்பேத்கர் இன்றும் என்றும், அமைப்பாய்த் திரள்வோம், அரசியலமைப்புச் சட்டம் 2, நக்சல்பாரி முன்பும் பின்பும், இந்து மதத்தில் புதிர்கள் ஆகிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை இன்றும் மீண்டும் ட்விட்டரில் திருமாவளவனுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், "அண்ணன் திருமாவளவனுக்கு தமிழக பாஜக சார்பில் புத்தகங்களை அன்போடு பரிசளிப்பதற்காக அலுவலகத்திலேயே வைத்துள்ளேன். விஜயபாரதம் வெளியிட்ட மனுவாதமும், ஆர்எஸ்எஸ்சும், ம.வெங்கடேசன் எழுதிய இந்துத்துவா அம்பேத்கர், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய சங்கத்தமிழும், பிற்காலத்தமிழும், மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசம்" என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை. "நீங்கள் நேரத்தையும், தேதியையும் சொன்னால் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.