இனி ஒரே இடத்தில் வாங்கலாம்; வருகிறது புத்தகப் பூங்கா

தமிழறிஞர்கள் விருது விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இனி ஒரே இடத்தில் வாங்கலாம்; வருகிறது புத்தகப் பூங்கா

"அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் அவர்களது படைப்புகளின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களது புத்தகங்களின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்களைப் போலவே இருக்கும் தமிழ்த் தொண்டர்களாகவும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய தீரமிகு எழுத்தாளர்கள், கனல் தெறிக்கும் பேச்சாளர்கள், களம் கண்ட போராளிகள், ஆய்வு அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளார்கள். இந்த விருதுகளை இவர்களுக்கு வழங்கிதன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்னொரு மிக முக்கியமான பெருமையை அடைகிறது. வாழும் காலத்திலேயே, தகுதிசால் தமிழ்த் தொண்டர்களைப் பாராட்டியது தமிழ்நாடு அரசு என்ற விருதை தமிழக அரசு அடைகிறது. இது தான் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

யாருடைய பெயரால் விருதுகள் உள்ளதோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அங்கீகாரத்தை பெறத் தவறினார்களோ, அது போன்ற சூழல் இனி வருங்காலத்தில் இருக்கக் கூடாது என்பதை இன்றைய தமிழக அரசு தனது கொள்கையாக வைத்துள்ளது என்பதை இந்த மாபெரும் நிகழ்ச்சியின் மூலமாகத் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழாட்சியாக, தமிழின ஆட்சியாக நாங்கள் நடத்தி வருகிறோம். நாங்கள் என்றால் உங்கள் அனைவரையும் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன். 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமலிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் 22.01.2022-ம் நாளன்று வழங்கப்பட்டன. இனி ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளாம், ஜூன் மாதம் 3-ம் நாள் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.

கரோனா காலத்தில் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கெனவே ஜனவரி மாதம் தொடங்க இருந்த புத்தகக்கண்காட்சி தள்ளிப்போன காரணத்தால், அவர்களுக்கு இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு, எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஒரு கோடி ரூபாய் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். அதனை மனதில் வைத்துக்கொண்டு ஐம்பது லட்சம் ரூபாயை தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.

இந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பதிப்பாளர், விற்பனையாளர்களுக்கு கிடைத்திருக்கிறது. புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க நான் சென்றபோது ஒரு அறிவிப்பைச் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், அது தேர்தல் காலம். உள்ளாட்சி அமைப்புனுடைய தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். அதனை அந்த நேரத்தில் சொல்ல முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அதற்கு இடம் தரவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அந்த அறிவிப்பைச் செய்கிறேன்.

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கலாம் என்றும் அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஒருமுறை சொன்னார். அதற்கு புத்தகப் பூங்கா என்றும் அவரே பெயர் சூட்டினார். பாபசி அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று அதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அரசு வழங்கும் என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் உறுதி அளிக்கிறேன்.

இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும். இந்த விருதுகளைப் பெற்றதன் மூலமாக உங்களது தொண்டு மேலும் மேலும் அதிகரிக்கட்டும். இவர்களைப் போலவே இன்னும் பலரும் உருவாகட்டும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in