
ட்விட்டர் பக்கத்தில் முதல்வரை அவதூறாக சித்தரித்து பதிவிட்டதாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் முனியப்பனூரை சேர்ந்தவர் எஸ்.ஏ.விக்னேஷ் (28). பாஜகவை சேர்ந்த இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட சிலரை கூலிப்பான்கள் என்ற தலைப்பில் மோசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளதாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த கரூர் சின்னஆண்டாங்கோவில் தீபக்சூரியன் (31) என்பவர் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விக்னேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது தமிழக முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும், மேற்படி புகைப்படத்தை மற்றவருக்கு பகிரும் பொழுது அதனால் ஒரு தரப்பினரை வேண்டுமென்றே ஆத்திரமூட்டி கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்தோடு புகைப்படத்தை சித்தரித்த விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு தீபக்சூரியன் தன்னுடைய புகாரில் தெரிவித்திருந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் விக்னேஷ் மீது வாங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதனையடுத்து இன்று (ஏப். 12-ம் தேதி) காலை அவரை கைது செய்தனர்.