நிதி ஆயோக் மீது பாயும் நிதிஷ்குமார் சகாக்கள்?

ஏழ்மைப் பட்டியலில் பிஹார் மாநிலம் முதலிடம்!
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

நிதி ஆயோக் தயாரித்துள்ள மாநிலங்களின் ஏழ்மை குறியீட்டெண் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது பிஹார். மாநில முதலமைச்சரான நிதிஷ்குமார் இதற்கு மவுனம் சாதிக்க, அவரது கட்சி மற்றும் ஆட்சியின் சகாக்கள் நிதி ஆயோக் மீது பாய்ந்து வருகின்றனர்.

சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட 12 காரணிகளின் அடிப்படையில், இந்திய மாநிலங்களின் ஏழ்மை குறியீட்டெண் பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு தயாரித்துள்ளது. இதில் முதலிடம் வகிக்கும் பிஹாரில், 51.91 சதவீத மக்கள் ஏழ்மையில் வீழ்ந்திருக்கிறார்கள். இது, மாநிலத்தை ஆளும் நிதிஷ்குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

அவரது பிரதான அமைச்சரவை சகாவான பிஜேந்திர யாதவ், ‘ நிதி ஆயோக் அறிக்கை அடிப்படையற்றது’ என்று வாய்விட்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு வசமாக சிக்கியிருக்கிறார். ’என்ன அறிக்கை? அப்படி எதையும் நான் பார்க்கவே இல்லை’ என்று இடிந்த முகத்துடன் நிதிஷ்குமார் நழுவியிருக்கிறார். பிஹார் வரலாற்றில் அதிக காலம் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் அரசியல் பயணத்தில், நிதி ஆயோக் அறிக்கை கறையாக மாறி இருக்கிறது.

இதுதான் சரியான வேளையென்று எதிர்க்கட்சிகள் நிதிஷ் மீது பாய்ந்து வருகின்றன. நிதிஷின் இந்தப் பேட்டியை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ‘ நிதிஷ் முகக்குறிப்பிலிருந்தே அவர் நிதி ஆயோக் அறிக்கையைப் படித்துவிட்டார் என்பது புரிகிறது..’ என்று கிண்டல் செய்திருக்கிறார். தேஜஸ்வியின் தந்தை லல்லு பிரசாத் யாதவோ, ‘நிதிஷ் இதற்காக வெட்கப்பட வேண்டும்’ என்று வாரியிருக்கிறார்.

நிதி ஆயோக்
நிதி ஆயோக்

மாநிலத்திலும் மத்தியிலும் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவினர், ‘நிதி ஆயோக் மீண்டும் ஒருமுறை பிஹாரில் களமிறங்கி ஆய்வு நடத்த வேண்டும்’ என்று பரிதாபமாக வேண்டுகோள் வைத்துள்ளனர்.

நிதி ஆயோக்கின் ஏழ்மைப் பட்டியலில் முதலிடம் பிடித்த பிஹாருக்கு அடுத்தபடியாக, அதிலிருந்து பிரிந்துசென்ற ஜார்க்கண்ட்(42.16%) இரண்டாமிடம் பிடித்திருக்கிறது. 3-வது இடத்தில், பாஜகவின் பெருமைமிகு மாநிலமான உத்தர பிரதேசம்(37.79%) உள்ளது.

இந்தப் பட்டியலின் கடைசி இடத்தில் கேரளாவும்(0.71%), கடைசியிலிருந்து 4-வது இடத்தில் தமிழ்நாடும்(4.89%) இடம்பிடித்துள்ளன. அடைப்புக்குறிக்குள் இருப்பவை, மாநிலத்தின் ஏழை மக்கள் சதவீதம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in