அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் ஆவடி சிறுமி: ஆறுதல் சொல்லி நெகிழ்ந்த அமைச்சர் நாசர்!

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் ஆவடி சிறுமி: ஆறுதல் சொல்லி நெகிழ்ந்த அமைச்சர் நாசர்!

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமி தான்யாவுக்கு சிகிச்சை முடிந்த நிலையில் இன்று வீடு திரும்புகிறார். அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு செய்ய இருப்பதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர்கள் ஸ்டிபன்ராஜ்-சௌபாக்கியா தம்பதியினர். இவர்களின் மூத்த மகள் தான்யா(9). ஆறு வருடங்களாக முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தான்யாவின் முகத்தின் வலது பக்கம் கொஞ்சம்கொஞ்சமாக சிதையத் தொடங்கியது. இந்த சூழலில் தான்யாவின் பெற்றோர்கள் தங்களுடைய மனக்குமுறல்களை முதல்வருக்குக் கோரிக்கையாக விடுத்தார்கள். இதைத் தொடர்ந்து தான்யா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உதவிகளைத் தமிழக அரசே செய்யும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து அரசு சார்பில் பூந்தமல்லி அருகே உள்ள தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அதி நவீன உடல் ஒட்டுறுப்பு ஆகஸ்டு 23ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

தான்யா டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழக முதல்வர் எடுத்த சீரிய முயற்சியால் சிறுமி தன்னுடைய பழைய முகத்தைப் பெற்று வருகிறார். அவரின் முகத்தில் லேசான வீக்கம் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பழைய முக அமைப்பு வரும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு ஒரு வீடு வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையைப் பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in