
கபடி விளையாட்டில் ரெய்டுக்குச் சென்ற வீரர் எதிரணியிடம் பிடிபடாமல் இருக்க தாண்டி குதித்து விழுந்தபோது மூர்ச்சையாகி உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (21). சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்த இவர் மிகச் சிறந்த கபடி வீரர். தன் திறமையை அதிகப்படுத்திக் கொள்ள சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சியும் பெற்று வருகிறார்.
இவரது ஊரில் முரட்டுக்காளை என்ற பெயரில் கபடி வீரர்கள் கொண்ட அணி உள்ளது. இந்த அணி வீரர்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கபடி போட்டிகளில் சென்று விளையாடி கோப்பை வென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர்களது அணியும் கலந்து கொண்டது.
இவர்களுக்கும் கீழகுப்பம் அணியினருக்கும் போட்டி நடைபெற்றது. முரட்டுக்காளை அணியில் விளையாடிய விமல் எதிரணியை நோக்கி ரெய்டு சென்றார். அப்போது எதிர் அணி வீரர்கள் நான்கு பேர் அவரை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து பிடிபடாமல் தப்பிப்பதற்காக ஒரே தாவாக தாவி மறுபக்கம் வந்து விழுந்தார். அப்போது எதிர் அணி வீரர் ஒருவர் வேகமாக ஓடி வந்து விமல் மீது விழுந்தார். இந்த நிலையில் விமல் எழுந்திருக்க முயன்றும் எழுந்திருக்க முடியாமல் அப்படியே கீழே சாய்ந்தார்.
உடனடியாக ஓடி வந்த விழா குழுவினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் மயங்கி கிடந்த விமலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து கபடி விளையாட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. விமலின் மறைவால் அந்த போட்டிக்கு வந்திருந்த விளையாட்டு வீரர்கள், போட்டி நடத்தியவர்கள், விமலின் சொந்த ஊர்க்காரர்கள் உட்பட அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.