`நாத்திகர், ஆத்திகர் குளிரும் வகையில் முதல்வர் முடிவெடுப்பார்'- அமைச்சர் சேகர் பாபு

`நாத்திகர், ஆத்திகர் குளிரும் வகையில் முதல்வர் முடிவெடுப்பார்'- அமைச்சர் சேகர் பாபு

"தருமபுரம் ஆதீனத்தில் பட்டனப் பிரவேசம் குறித்து நாத்திகர், ஆத்திகர் என அனைவரின் மனமும் குளிரும் வகையில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்" என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டனப் பிரவேசத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு ஆதீனங்கள் மட்டுமின்றி பாஜக, இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வரும் 22-ம் தேதி தருமபுரம் ஆதீனத்தை நானே தோளில் சுமந்து செல்வேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரம் ஆதீனத்தின் பட்டனப் பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பாஜக, பாமக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, இது தொடர்பாக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதல்வரின் உத்தரவு படி இந்து சமய அறநிலையத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு 112 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தோம். ஆனால், அதற்கும் கூடுதலாக பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி குறித்து முதல்வர் விரைவில் சுமுகமான ஒரு நல்ல முடிவை எடுப்பார். அனைத்து மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கை எடுப்பார். ஆதிக்கர், நாத்திகர் என அனைவரது மனமும் குளிரும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். யாரும் பல்லக்கு தூக்கக் கூடாது. நியாயத்திற்குத்தான் பல்லக்கு தூக்க வேண்டும். செய்தி வர வேண்டும் என்பதற்காக சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகின்றனர். எனவே, எவ்வித பிரச்சினையின்றி பட்டினப் பிரவேசம் நடத்தும் வழிவகை குறித்து பேசி வருகிறோம். வரும் 22-ம் தேதி தான் தருமபுரம் ஆதீனம் பட்டனப் பிரவேசம் நடைபெறுகிறது. தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மாநிலத்தில் அமைதியான சூழல், அனைவரும் விரும்பும் வகையில் செயல்படும் அரசு இது. முதல்வர் ஸ்டாலின் ஆன்மிகம், இறை வழிபாட்டிற்கு எதிராக கருத்து கூறவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in