தேர்தல் அறிக்கையில் சொன்னதை திமுக நிறைவேற்றவில்லையே!

பட்ஜெட்டால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்
தேர்தல் அறிக்கையில் சொன்னதை 
திமுக நிறைவேற்றவில்லையே!

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில், "தரமான ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களுக்கு அரசு சம்பள மானியம் வழங்கி வருகிறது. இந்நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களு்கு வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்புத்தொகைக்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீட்டுக்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளது" என்று கூறினார்.

தீபக்
தீபக்

தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து டிசம்பர்-3 மாற்றுத்திறனாளிகள் சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தீபக் கூறுகையில், "மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதை வரவேற்கிறோம். ஆனால், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்தத் தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால், அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. விரைவில் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.