கேரளாவில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்டது ராணுவம்; பிரிகேடியர் பெருமிதம்

கேரளாவில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்டது ராணுவம்; பிரிகேடியர் பெருமிதம்
ஜி.ஆர்.ராமகிருஷ்ணனின் 21-வது நினைவு தின அஞ்சலி

கேரளா, மலப்புரத்தில் மலையேற்றத்தின்போது பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட இளைஞரை வெலிங்டன் ராணுவ வீரர்களின் மீட்டது, ராணுவத்தின் கடமை என வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜி.ஆர்.ராமகிருஷ்ணன், வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சிமுடித்து அருணாச்சல பிரதேசம் சியாச்சின் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி சியாச்சின் பகுதியில் பனிப்பாறையில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் உதகை கப்பத்தொரை கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அவரது நினைவாக கப்பத்தொரை பகுதியில் கட்டப்பட்ட நினைவு சதுக்கத்தை, அவரது தாயார் சுப்புலட்சுமி பராமரித்து வந்தார். இந்நிலையில், நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தினர் ஜி.ஆர்.ராமகிருஷ்ணனின் நினைவு சதுக்கத்தை பராமரிக்க முன்வந்தார்.

ஜி.ஆர்.ராமகிருஷ்ணனின் 21-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தினர் சதுக்கத்தை புதுப்பித்து நினைவு தினத்தை அனுசரித்தனர். இங்கு, இன்று(பிப்.11) நடந்த நிகழ்ச்சியில் வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் நினைவு சதுக்கத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஆத்மநாதன், தேசிய மாணவர் படை நீலகிரி மாவட்ட அதிகாரி கர்னல் ஏ.சீனிவாஸ், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், தாய் சுப்புலட்சுமி, மாவட்ட சார்பு நீதிபதி ஸ்ரீதரன், நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் பி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில், நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க பொருளாளர் கேப்டன் கே.பி.ராமகிருஷ்ணன், முதன்மை ஆலோசகர் மேஜர் செல்வம், உறுப்பினர்கள் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஆத்மநாதன் பேசும்போது, “மெட்ராஸ் ரெஜிமெண்ட் மிகவும் பழமையானது. மெட்ராஸ் ரெஜிமெண்ட் பேண்ட் குடியரசு தின அணிவகுப்பு பங்கேற்று சிறந்த பேண்ட் என தேர்வு பெற்றுள்ளது. ராணுவம் மட்டுமின்றி விமானப்படை, கடற்படை சேர்ந்து நாம் அனைவரும் முன்னாள் ராணுவத்தினர். நமக்கு தெரிந்த கடவுள் பாரத மாதா. எங்களுக்கு மதமோ, ஜாதியோ தெரியாது. எங்களது ஒரே உடை சீருடை மட்டுமே. இந்த மனநிலை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடவுள் நம்மை பிரிந்திருக்கக் கூறவில்லை, சேர்ந்திருக்க கூறியுள்ளார்” என்றார்.

வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங்
வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங்

பின்னர் நம்மிடம் பேசிய வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங், “கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலம்புழா நண்பர்களுடன் சென்ற இளைஞர் ஆர்.பாபு மலைச்சரிவில் இருந்த சிறிய இடுக்கில் சிக்கிக்கொள்ள 2 நாட்களுக்குப் பின்னர் அவரை ராணுவம் மீட்டது.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மைய மலையேற்றம் நிபுணத்துவம் பெற்ற ராணுவ வீரர்கள் இளைஞரை பாதுகாப்பாக 4 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். வெலிங்டன் ராணுவ வீரர்கள் தங்கள் கடமையைத் தான் செய்துள்ளனர்.

மேலும், 2 தினங்களுக்கு முன் தென்பிராந்திய அதிகாரி ஜெனரல் ஏ.அருண், வெலிங்டன் ராணுவ மையத்தைத் தொடர்புகொண்டு, கேரள மாநிலம் மலப்புரத்தில் நண்பர்களுடன் ட்ரெக்கிங் சென்ற இளைஞர் பாபு, மலைச்சரிவில் இருந்த சிறிய இடுக்கில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்க முடியவில்லை. மீட்புப்பணிக்கு ராணுவம் செல்ல அறிவுறுத்தினார்.

இதன் பேரில், மலையேற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற மெட்ராஸ் ரெஜிமெண்ட்டை சேர்ந்த 2 உயர் அதிகாரிகள், 2 இளநிலை அதிகாரிகள் மற்றும் 5 பேர் கொண்ட குழுவினர் அங்கு சென்றனர். காலை சூரியோதம் தொடங்கியதும், நமது குழுவினர் மலையேறி இடுக்கில் சிக்கிய இளைஞரை பாதுகாப்பாக 4 மணி நேரத்தில் மீட்டனர். நாங்கள் எங்கள் கடமையை செய்தோம். பணியின்போது உயிரிழப்பது கவுரவமானது என்பதே வெலிங்டன் ராணுவ மையத்தின் குறிக்கோளாகும். எங்களுக்கு கடமைதான் முதன்மையானது” என்றார்.

இந்நிலையில், “ராணுவ மையத்தில் மீண்டும் ஹெலிகாப்டர் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதா” என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கவில்லை. “நோ கமெண்ட்ஸ்” என கருத்து கூற முடியாது என்றார்.

Related Stories

No stories found.