சத்திய ஞான சபை பெருவெளியில் தொடங்கியது தொல்லியல் ஆய்வு!

வடலூரில் பெருவெளியில் தொல்லியல்துறையினர் ஆய்வு
வடலூரில் பெருவெளியில் தொல்லியல்துறையினர் ஆய்வு

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியில், தொல்லியல் துறை நிபுணர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ள சத்திய ஞான சபை முன்பாக உள்ள பெருவெளியில் 99.6 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜே.சத்யநாராயணா பிரசாத் ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வடலூரில் பெருவெளியில் தொல்லியல்துறையினர் ஆய்வு
வடலூரில் பெருவெளியில் தொல்லியல்துறையினர் ஆய்வு

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்வதேச வள்ளலார் மையம் அமைக்கப்படும் இடத்தில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் எச்சங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அந்தப் பகுதியில் எந்த ஒரு கட்டுமானமும் நடைபெறவில்லை என தொல்லியல் துறை கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”அந்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தால் மட்டுமே முறையாக இருக்கும்” என தெரிவித்தனர். அதை ஏற்று மூன்று பேர் கொண்ட தொல்லியல் நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

வடலூரில் பெருவெளியில் தொல்லியல்துறையினர் ஆய்வு
வடலூரில் பெருவெளியில் தொல்லியல்துறையினர் ஆய்வு

இந்த நிலையில் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் தொல்லியல் துறையினர் இன்று ஆய்வை துவக்கி உள்ளனர். குறிப்பாக, சர்வதேச மையம் அமைய உள்ள நிலப்பரப்பில் 40 ஏக்கருக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கையகப்படுத்தி அதில் சர்வதேச மையம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை மக்கள் முன்வைத்திருந்தனர். அந்த பகுதியில் தற்போது தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மாநில தொல்லியல் துறை இணை இயக்குநர் டாக்டர்.சிவானந்தன் தலைமையிலான குழு இந்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச மையம் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளில் இறங்கி ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in