ஏப். 2 முதல் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மத்திய பல்கலை அறிவிப்பு

ஏப். 2 முதல் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மத்திய பல்கலை அறிவிப்பு

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் 2009-ம் ஆண்டு முதல் திருவாரூரில் செயல்பட்டு வருகிறது. தற்போது பல்கலைக்கழகத்தில் 7 ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளும், 23 முதுகலைப் பட்டப் படிப்புகளும், 28 ஆராய்ச்சிப் படிப்பு பிரிவுகளும் செயல்படுகிறது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த இளங்கலை அறிவியல் கல்வியியல் கல்வி - கணிதம் (பி.எஸ்சி., பி.எட்.)- நான்கு ஆண்டுகள், ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் – வேதியியல் (எம்.எஸ்சி- 5 ஆண்டு), ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் - உயிரி தொழில்நுட்பவியல் (எம்.எஸ்சி- 5 ஆண்டு), ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் - கணிதம் (எம்.எஸ்சி- 5 ஆண்டு) ஆகிய பாடப்பிரிவுகளுடன் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் - இயற்பியல், 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் பொருளாதாரம் (எம்.ஏ.), ஒருங்கிணைந்த முதுகலை நிகழ்த்துக்கலை - இசை (எம்.பி.ஏ-5 ஆண்டுகள்) ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்படுகிறது.

இளங்கலை அறிவியல் - ஜவுளி (பி.எஸ்சி) - (மூன்று ஆண்டுகள்), தொழில் நுட்பவியல் (பி.எஸ்சி) - (மூன்று ஆண்டுகள்), இளங்கலை - ஜவுளி வணிகப் பகுப்பாய்வு - (பிபிஏ) - (மூன்று ஆண்டுகள்) ஆகிய பட்டப்படிப்புகள் கோயம்புத்தூரில் உள்ள SVPISTM நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2022-23-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET-2022) தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலைப் பட்டப் படிப்புக்களுக்கான பொது நுழைவுத் தேர்வு, தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இளநிலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதுகலை பாடப்பிரிவுகளுக்கான (CUET(PG)–2022) பொது அறிவிப்பு தேசிய தேர்வு முகமையால் (NTA) தனியாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.