இன்னொரு பாலம் கட்டுங்கள்: பாலாற்றுப் பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மக்கள் யோசனை!
பாலாற்றுப் பாலத்தில் நடந்துவரும் பராமரிப்புப் பணிகள்

இன்னொரு பாலம் கட்டுங்கள்: பாலாற்றுப் பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மக்கள் யோசனை!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்கிறவர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகக் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதற்குக் காரணம், செங்கல்பட்டு அருகே பாலாற்றுப் பாலத்தில் நடந்துவரும் பராமரிப்புப் பணிகள்தான். கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகளால், போக்குவரத்து திருப்பிவிடப்பட்டு பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாகவும், இதனால் சென்னை சென்று சேர பல மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது என்றும் பலர் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். அங்கு புதிதாக இன்னொரு பாலத்தையும் கட்டுவதற்கு இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

முக்கிய வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் வழியாக தினமும் பல லட்சம் வாகனங்கள் செல்கின்றன. இது தென் மாவட்டங்களை சென்னையோடு இணைக்கும் முக்கியமான வழித்தடமாகும். மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இந்த பாலம் வழியாகவே அதிகம் செல்லும். அதேபோல் அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தை அதிகம் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. வட மாவட்டங்களுக்கும் இந்தப் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலாற்றுப் பாலத்தில், கடந்த 20 நாட்களுக்கு மேலாகப் பராமரிப்புப் பணிகள் நடந்துவருகின்றன. இதனால் ஆனால் அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாற்று வழியைப் பயன்படுத்தி சென்னையை அடைய வேண்டிய சூழல் உள்ளது. சென்னையிலிருந்து திரும்புவதற்கும் இதே கதைதான்.

இன்னொரு பாலம் அவசியம்

மார்ச் 20-ம் தேதி இந்தப் பாலம் திறக்கப்பட்டுவிடும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு நிலைமை சரியாகலாம் என்றாலும் எதிர்காலத்தை யோசித்து, புதிய பாலத்தையும் அங்கு கட்டுவது நல்லது என்ற யோசனையை மக்கள் முன்வைக்கிறார்கள்.

இப்போது சென்னை செல்வதற்கு ஒரு பாலமும், சென்னையிலிருந்து வருவதற்கு ஒரு பாலமும் ஆக இரண்டு பாலங்கள் பாலாற்றில் உள்ளன. புதிதாக நான்கு வழிகள் கொண்ட ஒரு புதிய பாலத்தைக் கட்ட வேண்டும் என்பது மக்களின் யோசனை. கூடுதலாக இன்னொரு பாலம் கட்டினால், பராமரிப்புப் பணிகள் நடந்தாலோ, மழைக்காலத்தில் ஏதாவது ஒரு பாலம் சேதம் அடைந்துவிட்டாலோ அல்லது பெரிய விபத்து நடந்து போக்குவரத்துக்குத் தடை ஏற்படும்போதோ அந்தப் பாலத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதனால் போக்குவரத்து முடங்கும் பிரச்சினை இருக்காது என்று மக்கள் கருதுகிறார்கள்.

பாலாற்றுப் பாலம்
பாலாற்றுப் பாலம்

மேலும், பாலத்திற்குக் கீழே தடுப்பணை ஒன்றையும் கட்டினால் அது அப்பகுதியின் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கும் துணை நிற்கும் என்று கூறும் மக்கள், இந்தப் பகுதியில் எந்தக் காலத்திலும் மணல் அள்ள நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

எதிர்காலத்தைச் சிந்தித்து சொல்லப்படுகிற இந்த யோசனையைத் தமிழக அரசும், மக்கள் பிரதிநிதிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.