அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

சாலை மறியலில் சிக்கிய அமைச்சரின் கார்: இன்ஸ்பெக்டர், உளவுப் பிரிவு காவலர் பணியிடை மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டிற்கு உட்பட்ட 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 7 வீடுகள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதால் அவற்றை வருவாய்த்துறையினர் இடித்தனர். அரசுப் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பதாக மீதமுள்ள வீடுகளை அகற்றுவதற்காக வருவாய்த்துறையினர் மூலம் அந்த வீடுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

வருவாய்த்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால், சுமார் 500க்கும் மேற்பட்டோர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முடக்கப்பட்டு பத்து கி.மீ. வரை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காரும் நகரமுடியாமல் நின்றது. காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் போராட்டம் நடத்திவந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகள் மற்றும் முதல்வரிடம் உங்களின் கோரிக்கையை எடுத்துச் சொல்லி பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

அமைச்சரின் கார் போக்குவரத்தில் சிக்கியதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தகவல் விசாரிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருப்பதை மேலிடத்திற்குத் தகவல் தெரிவிக்காத காரணத்தால் உளவுப் பிரிவில் துணை ஆய்வாளராக பணியாற்றிவந்த உதயகுமார் மற்றும் மறைமலைநகர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மறைமலைநகர் காவல் நிலையத்தில் பணிக்குச் சேர்ந்து ஒருவாரமே ஆன நிலையில் அவருக்கு பணியிடை மாறுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in