சரிந்து விழுந்த வழிகாட்டிப் பலகை: சாலையில் சென்றவர்கள் படுகாயம்

சரிந்து விழுந்த வழிகாட்டிப் பலகை: சாலையில் சென்றவர்கள்  படுகாயம்

கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டிப் பலகை திடீரென சரிந்து விழுந்ததால் சாலையில் சென்றவர்களில் பலர் படுகாயம் அடைந்தனர்.

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்தச் சாலையில் விடுமுறை நாளான இன்று மிகுந்த பரபரப்புடன் போக்குவரத்து காணப்பட்டது. அப்போது அவ்வழியாக மாநகரப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவையும் சென்றுகொண்டிருந்தன. அப்போது திடீரென சாலை வழிகாட்டி பலகை மேலிருந்து சரிந்து கீழே விழுந்தது.

இதில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவர் சிக்கிக் கொண்டனர். அதில் சண்முகசுந்தரம் என்பவர் பலத்த காயமடைந்தார். அந்த இருசக்கர வாகனம் இரண்டாக உடைந்தது. அதேபோல சரக்கு வாகனத்தின் மேல் விழுந்ததில் சரக்கு வாகனத்தை ஒட்டி வந்தவரும் படுகாயம் அடைந்தார். இருவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கிய நிலையில் அது பலத்த சேதமடைந்துள்ளது. சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதனால் கத்திப்பாரா சந்திப்பு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடுமையான நெரிசலான போக்குவரத்தைக் கொண்டிருந்த சாலையில் இப்படி வழிகாட்டிப் பலகை விழுந்தது பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து விசாரித்து வரும் போலீஸார், வழிகாட்டி பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்த ராட்சத தூண் மீது மாநகரப் பேருந்து ஒன்று மோதியதால்தான் வழிகாட்டும் பலகை சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ராட்சத கம்பத்தின் மீது மோதிய பேருந்தின் ஓட்டுநர் ரகுநாதன் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீஸாரிடம் சரணடைந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in