அம்மா உணவகம் மூடப்படாது - முதல்வர் உறுதி

கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கம்தி இந்து

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், அம்மா உணவகங்கள் மூடப்படாது என்று உறுதியளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அம்மா மினி கிளினிக் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அம்மா உணவகங்கள் மூடப்பட முயற்சி நடக்கிறது என்பதையும் குற்றஞ்சாட்டிப் பேசினார்கள். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுக அரசு போல் திமுக அரசு நடந்து கொள்ளாது, அம்மா உணவகங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதனால் அம்மா உணவகங்கள் மூடப்படாமல் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

மேலும் இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “கடந்த கால அதிமுக ஆட்சியில் திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மூடப்பட்டதற்கு பட்டியல் எங்களிடம் இருக்கிறது. ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கலைஞர் அவர்களால் தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றி அமைத்தார்கள்.

120 கோடி மதிப்பீட்டில் கலைஞர் உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பராமரிக்காமல் பாழடைய வைத்தார்கள். அங்கு அண்ணாவின் சிலையின்கீழ் இருந்த கலைஞரின் பெயரை மறைத்தார்கள்.

கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் கலைஞர் பெயரை நீக்கியது யார்? செம்மொழிப் பூங்காவில் கலைஞர் பெயரை மறைத்தது யார்? கடற்கரைப் பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை மறைத்தது யார்? ராணிமேரி கல்லூரியில் இருந்த கலைஞர் பெயரை மறைத்தது யார்? பெரியார் பெயரில் அமைந்த சமத்துவபுரங்களை கவனிக்காமல் விட்டது யார்? திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேஷனை முடக்கியது யார் ? நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சி, வரும் முன் காப்போம் ஆகிய திட்டங்களை கிடப்பில் போட்டது யார்? சமச்சீர் கல்வி திட்டத்தில் இருந்த செம்மொழி வாழ்த்துப் பாடலை எடுத்தது, ஏழாம் வகுப்பு பாடத்தில் இருந்த கலைஞர் பெயரை நீக்கியது யார்?

இதையெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்பதால், நாங்கள் இதைச் செய்தோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம். அம்மா உணவகம் மூடப்படக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். நிச்சயம் மூடப்படாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in