பாரதியார் இல்லத்தில் அமித் ஷா!

பாரதியார் இல்லத்தில் அமித் ஷா!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஒரு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்று பார்வையிட்டதுடன், பாரதியாரின் உருவப் படத்தை வணங்கி மரியாதை செய்தார்.

இன்று காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அமித் ஷாவை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து நேராக மகாகவி பாரதியார் வாழ்ந்த நினைவு இல்லத்திற்கு அமித் ஷா சென்றார்.

அமித் ஷாவை வரவேற்கும் முதல்வர் ரங்கசாமி,  துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்...
அமித் ஷாவை வரவேற்கும் முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்...

அங்கு அவரை வரவேற்கும் வகையில் பாரதியாரின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இல்லத்தை சுற்றிப் பார்த்த அமித் ஷா அங்கு வைக்கப்பட்டுள்ள பாரதியார் படத்தின் முன்பு நின்று மலர்களைத் தூவி வணங்கினார். அவரோடு முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாரதியார் நினைவு இல்லத்தில் பதிவேட்டில் கையெழுத்து இடும் அமைச்சா்
பாரதியார் நினைவு இல்லத்தில் பதிவேட்டில் கையெழுத்து இடும் அமைச்சா்

எதிர்க்கட்சிகள் போராட்டம்

இந்நிலையில் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை புதுச்சேரியின் பல்வேறு முக்கியச் சந்திப்புகளில் இன்று காலை அமித் ஷா வரும் நேரத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தின. அவர்களை புதுச்சேரி காவல் துறையினர் கைது செய்தனர்.

அமித் ஷா வருகையை கண்டித்து காரைக்காலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
அமித் ஷா வருகையை கண்டித்து காரைக்காலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இன்று காலை தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி காளிதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீதர், இந்தியத் தேசிய இளைஞர் முன்னணி இயக்கத்தின் தலைவர் கலைபிரியன், புதுச்சேரி சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் ஜெபின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் நடந்த போராட்டம்...
புதுச்சேரியில் நடந்த போராட்டம்...

இந்த நிலையில் அரவிந்தர் ஆசிரமம், அரசு நலத்திட்டப் பணிகள் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் அமித்ஷா கலந்துகொள்கிறார். மாலையில் ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளார்.

Related Stories

No stories found.