தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அதிக நீர்வரத்து காரணமாக பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் ஓரத்தில் நின்று மட்டும் குளிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய,விடிய பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து அதிகரித்தது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த 2 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் நேற்று நீர்வரத்து கொஞ்சம் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பெய்த மழையின் காரணமாக மீண்டும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் அந்தப் பகுதியில் குளிப்பதற்கு தடை நீடித்து வருகிறது.
ஆனாலும் குற்றாலம் பேரருவியின் உள்ளே செல்ல அனுமதிக்காத போலீஸார், அதன் ஓரத்தில் நின்று குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர். அதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்து குளித்துச் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் பாதுகாப்பு வளையத்தை ஒட்டியுள்ள இரண்டு பகுதிகளிலும் தடுப்பு வழிகள் வைத்து அடைத்து சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்லாதவாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் நீர்வரத்து குறைந்தால் மட்டுமே குற்றாலம் பேரருவியில் முழுமையான பகுதிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.