`கிராம மக்கள் நகரத்துக்கு இடம்பெயர்தல் தடுக்கப்படும்'- முதல்வர் மு.க.ஸ்டாலின்

`கிராம மக்கள் நகரத்துக்கு இடம்பெயர்தல் தடுக்கப்படும்'- முதல்வர் மு.க.ஸ்டாலின்

``ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும். அதனால் நகரத்தினை நோக்கி, கிராம மக்கள் இடம்பெயர்தல் தடுக்கப்படும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு அரசின், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான முக்கிய அம்சங்கள் குறித்து அவர் ஆற்றிய உரையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 7 அம்ச தொலை நோக்கு திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளேன். அதில் ஒன்றாக ‘மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி’ என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் ‘கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம்’ வகுக்கப்பட்டது. ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியையும் , தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

இந்த திட்டத்தைத் தமிழ்நாட்டில் உள்ள 12,528 கிராம பஞ்சாயத்துகளிலும் 5 வருடங்களில் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். 2021-22-ம் ஆண்டில் 1997 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.207 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் வகையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கிராம அளவில் அனைத்து துறையின் திட்டங்களையும் ஒன்றிணைத்துச் செயல்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம். கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவருதல், நீர் ஆதாரங்களைப் பெருக்கி சூரிய சக்தி பம்ப் செட்டு வசதிகளோடு நுண்நீர் பாசன வசதி ஏற்படுத்துவது, வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துவது, ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பண்ணைக் குட்டைகளை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் திட்டத்தை மேம்படுத்துதல், பால் உற்பத்பத்தியைப் பெருக்குதல், வருவாய்த்துறையின் பட்டா மாறுதல் பெறுதல், சிறு குறு விவசாயிகளுக்குச் சான்று வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவு பயிர்க் கடன் வழங்குதல் உள்ளிட்ட கிராம பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்து துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும். அதனால் நகரத்தினை நோக்கி, கிராம மக்கள் இடம்பெயர்தல் தடுக்கப்படும். கிராம வளர்ச்சி என்பது பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டிய இந்தக் காலகட்டத்தில், கிராமத்திலுள்ள அனைத்து உழவர்களையும், ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாவது பயனடையச் செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் அர்ப்பணிப்போடு, சிந்தையையும் செயலினையும் ஒரே நேர்கோட்டில் செலுத்தி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்திடக் கேட்டுக் கொண்டு, வேளாண் பெருமக்கள், அரசுக்கும், அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்“ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in