ஆறு நாட்களுக்குப் பின்னர் ஆழ் கடல் நோக்கி..

பணிக்கு திரும்பிய மீனவர்கள்
ஆறு  நாட்களுக்குப் பின்னர் ஆழ் கடல் நோக்கி..

வங்கக்கடலில்  உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் இருந்த நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்று காலை கடலுக்குப் புறப்பட்டு சென்றனர்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதியன்று குறைந்த  காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் மீன் பிடிக்கச் செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டது. அதனால் கடந்த டிச.5 முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலைக்குள்  மேன்டூஸ் புயல் முழுவதுமாக கரையேறியது. அதனைத் தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் கொந்தளிப்பாக இருந்த வங்கக்கடல் நேற்று இரவிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது.

இதனையடுத்து நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்  மீன் பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஆறு நாட்களுக்குப் பின் இன்று அதிகாலையில் வலை உள்ளிட்ட உபகரணங்களுடன் படகில் ஏறி ஆழ்கடல் நோக்கி ஆனந்தமாக  புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in