தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க அதிரடி திட்டம்!

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க அதிரடி திட்டம்!

"தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்புக் கட்டணச் சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும்" என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், "அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவீத பங்குத் தொகை தரப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்புக் கட்டணச் சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும். ஒருகால பூஜை திட்டத்தில் நிதிவசதியற்ற மேலும் 2 ஆயிரம் கோயில்களுக்கு அரசு மானிய திட்டம் விரிவுபடுத்தப்படும். 27 திருக்கோயில்களில் ரூ.80 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் அமைக்கப்படும். 52 வாரங்களில் முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும்" என்று கூறினார்.

மேலும் "தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு ரூ.1 கோடியில் மணி மண்டபம், 3 நாட்கள் அரசு விழா நடத்தப்படும். ராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் " என்றார்.

"தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாச்சார மையம் முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்படும். திராவிட மாடல் ஆட்சி என்பது எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. சாதி, மத அரசியலுக்கு எதிரானது. இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலம் பொற்காலமாக இருக்கும். திமுக ஆட்சி முடிவதற்குள் 15 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணி நிறைவடையும்" என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in