75,000 ‘மாப்பிள்ளைகள் ஜாதகம்’ காவல்துறை கையில்: டிஜிபி அதிரடி!

போட்டோ, வீடியோ உட்பட சகலமும் அடங்கிய மென்பொருள் தயார்
75,000 ‘மாப்பிள்ளைகள் ஜாதகம்’ காவல்துறை கையில்: டிஜிபி அதிரடி!

தமிழகத்தில் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை  உடனடியாக அடையாளம் காணும் வகையில், குற்ற நபர்கள் 75 ஆயிரம் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு  நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் குற்ற வழக்குகளை சிறப்பாக கையாண்ட தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஊக்க தொகைகளையும் வழங்கினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஜிபி பேசும்போது, “கோவை மாவட்டத்தில் காவலர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். கொலை மற்றும் ஆதாயக் கொலைகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு பணியாற்றி வருகின்றனர். கோவை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தற்போதுள்ள 15 காவல் நிலையங்களுடன் கூடுதலாக 3 புதிய காவல் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த மாவட்டத்தில்  கடந்த ஆண்டு 1,597 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.  

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு செலவில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. காவல் துறை நவீனமயமாக்கலில் தற்போது  நவீன தொழில் நுட்பங்கள் கொடுத்துள்ளோம். இதுவரை  75 ஆயிரம் குற்ற நபர்களின் போட்டோ மற்றும் விடியோக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.  போலீசார் சந்தேகிக்கும் நபரின் புகைப்படத்தை வைத்தே அவரது குற்றபின்னணியை கண்டறியும் வகையிலான மென்பொருளையும் வைத்துள்ளோம். அதனை ரோந்து போலீஸர் எளிதில் பயன்படுத்தலாம்.  

கஞ்சா கடத்தலை தடுக்க மாநில எல்லைகளின் 6 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்துள்ளோம். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டுவருவதை கண்காணிக்க தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கிறோம். மேலும் திருமணம் மோசடி, இணைய கடன் மோசடி, ஆன்லைன் சூதாட்ட மோசடி ஆகியவை  குறித்து காவல் துறை சார்பில் மக்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்று விளக்கமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in