இதையெல்லாம் செய்தால் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமே!

இதையெல்லாம் செய்தால் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமே!

புதிய அரசு பதவி ஏற்றதும் தமிழ்நாடு முதலமைச்சர், “ 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ‘ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆக்குவோம்” என அறிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மூலமாக அந்த அறிவிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றால், மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தியை (GSDP) 75 லட்சம் கோடியாக உயர்த்துவது என்று பொருள். தற்போது நம்முடைய மாநில மொத்த உற்பத்தி சுமார் 25 லட்சம் கோடியாக இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்டுவதற்கு இதை மும்மடங்காக உயர்த்த வேண்டும். இது எட்ட முடியாத இலக்கு அல்ல.

ஏற்கெனவே அதற்கான விரிவான சாத்தியப்பாடுகளை நமது நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த இலக்கை எட்டினால் தமிழ்நாடு பொருளாதார நிலையில் சிங்கப்பூர், ஹாங்காங் முதலான நாடுகளைத் தாண்டிச் சென்றுவிடும்.

ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை எட்டுவதற்கு தொழில் துறை முதன்மையாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதற்குத் தகுதி வாய்ந்த அமைச்சர் இருக்கிறார். இந்தக் குறுகிய கால இடைவெளியில் பல முதலீடுகளை நமது மாநில அரசு ஈர்த்திருப்பது தொழில் துறை அமைச்சரின் திறமைக்குச் சான்று. இதேவேகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், நிச்சயமாக முதலீடுகளுக்கான சிறந்த மாநிலமாக மிக விரைவிலேயே தமிழ்நாடு மாறிவிடும். அவ்வாறு முதலீடுகளை ஈர்க்கும்போது கணிசமாக வேலைவாய்ப்புகளை உற்பத்திசெய்யும் விதமான தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். அப்போதுதான் நமது மாநிலத்திலுள்ள மனித வள ஆற்றலை நாம் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும்.

தொழில்களைத் தொடங்குவதற்கு சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் பலவிதங்களில் அனுகூலமானவை என்றபோதிலும் தொழில் வளர்ச்சி இல்லாத பின்தங்கிய மாவட்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் தொழில் வளர்ச்சி என்பது பரவலாகவும் அனைவரையும் உள்ளடக்கும் விதத்திலும் அமையும்.

பயிர் செய்யப்படும் நிலப்பரப்பை விரிவுபடுத்துவது என்று ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தரிசு நிலம் அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது. 2020-21 கணக்கின்படி நடப்பு தரிசு 8.03 % இதர தரிசு 14.81% பயிரிடுவதற்கு ஏற்ற தரிசு 2.48% ஆக உள்ளது. மாநிலத்தில் உள்ள மொத்த நிலத்தில் சுமார் 25% நிலம் இங்கே சாகுபடி செய்யாமல் தரிசாகக் கிடக்கிறது. அந்த தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டுவரும்போது நிலமற்ற விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானதாகும். அதை இரண்டு விதங்களில் செய்யவேண்டும். ஒன்று, அவர்களை நிலம் உள்ளவர்கள் ஆக்குவது. இன்னொன்று, அவர்களில் கணிசமான பகுதியினரைத் திறன் பெற்ற தொழிலாளர்களாக மாற்றி தொழிற்சாலைகளை நோக்கி ஈர்ப்பது. இதற்கு விரிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும். தற்போதுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள் இதற்குப் போதுமானவை அல்ல.

நமது உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது இந்தப் பொருளாதார இலக்கை அடைவதற்கு இன்றியமையாததாகும். அது குறித்தும் ஆளுநர் உரையில் அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது என்றாலும் ஒருங்கிணைந்த முறையில் அதைச் செய்ய வேண்டும்.

ரவிக்குமார்
ரவிக்குமார்

துறைமுகங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது குறித்து நமக்கு திட்டம் தேவை. தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் 3 துறைமுகங்கள் உள்ளன. இதுதவிர, 17 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட தேவைகளுக்காக இயங்கக் கூடிய சிறு துறைமுகங்களும் உள்ளன. அதாவது, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையின் தேவைக்காக (Captive ports) அந்தத் துறைமுகத்தில் பொருட்களை இறக்குமதி செய்வார்கள். உதாரணமாக, திருக்கடையூரில் உள்ள சிறிய துறைமுகத்தில் நாப்தாவை இறக்குமதி செய்கின்றனர். அங்கு நாப்தா தொழிற்சாலை ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்துக்கான துறைமுகமாக இது உள்ளது.

அனல்மின் நிலைய பணிகளுக்காக காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளது. தரங்கம்பாடியில் செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்துக்காக ஒன்று செயல்படுகிறது. நாகப்பட்டினத்தில் எண்ணெய் எடுப்பதால் அங்கே ஒரு துறைமுகம் உள்ளது. கூடங்குளத்தில் அணுமின் நிலையப் பணிகளுக்காக கொடுத்துள்ளனர். மற்றவை எல்லாம் பொதுவான துறைமுகங்களாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையின்கீழ் வருகிறது.

திருக்கடையூரில் உள்ள நாப்தா கம்பெனி துறைமுகத்தைப் பயன்படுத்துவதால் மாநில அரசுக்கு வருவாய் வருகிறது. அதேநேரம், சிறிய துறைமுகங்களை தமிழ்நாடு அரசு பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

சில பகுதிகளில் உள்ள சிறிய துறைமுகங்கள் செயல்படாமலேயே உள்ளன. நமக்கு மிகப் பெரிய கடல் பரப்பு உள்ளதால், சிறிய துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கிறோம். இதை லாபகரமாக மாற்றக் கூடிய முயற்சிகளையும் மாநில அரசு எடுக்க வேண்டும்.

வருமானத்தைப் பெருக்குவதற்காக மணல் குவாரிகள் போன்ற குறுக்குவழிகளை அரசு நாடுவது, நீண்டகால நோக்கில் இழப்பாகவே முடியும். தற்போது காலநிலை மாற்றத்தால் நமது மாநிலம் மழை வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. தற்போது ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் மணல் குவாரிகளால் ஏற்படுபவையாகவே இருக்கின்றன. கணக்கிட்டுப் பார்த்தால் மணல் குவாரிகள் மூலமாக நமது மாநிலத்துக்கு வந்த வருமானத்தை விட அதற்காகச் செய்யப்படும் செலவுகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, வருமானத்தை அதிகரிக்கும் போது அதனால் வரும் இழப்பின் அளவையும் ஒப்பு நோக்கித் திட்டமிட வேண்டும்.

இந்திய நிதியமைச்சர் 2019-ம் ஆண்டு இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக ஆக்குவோம் என்று அறிவித்தார். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் அதில் பாதி தூரம் கூட போக முடியவில்லை. இப்போது தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று அறிவித்திருப்பதைப் பார்த்தால், ஒன்றிய அரசை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களுக்கு வயிற்றெரிச்சல் தான் அதிகரிக்கும். அந்த இலக்கை நாம் எட்டிவிடாமல் பல்வேறு தடைகளை அவர்கள் நிச்சயம் உருவாக்குவார்கள். அவற்றையும் சமாளித்து தான் இந்த இலக்கை நாம் எட்டியாக வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் நல்லாதரவோடு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த இலக்கை எட்டுவார். அதை எட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 2030-ம் ஆண்டில் அவரே முதலமைச்சராக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.

Related Stories

No stories found.