திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். ‘அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் ஏதுமில்லாத நிலையில், மதுரையில் இருந்து காளைகளையும், சிவகங்கையில் இருந்து  மாடு பிடி வீரர்களையும் வரவழைத்து வணிக ரீதியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அலகுமலை அடிவாரத்தில் பல ஆண்டுகள் பழைய மரங்களை அகற்றுகிறார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு அரசாணையின்படி  ஜல்லிக்கட்டு போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து அரசுதான் அறிவித்து வருகிறது. அந்த அறிவிப்பு பட்டியலில் அலகுமலை இடம்பெறவில்லை. எனவே அலகுமலை ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும், ஜல்லிக்கட்டு நடத்தும்போது உணவகங்கள் அமைக்கப்பட்டு, அதனால் அதிகம் கழிவுகள் சேர்கின்றன. இவற்றால் சுகாதார கேடும் ஏற்படுகின்றன. கிராம மக்களுக்கு எந்த பயனும் தராத இந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு, மனுதாரரின் விண்ணப்பத்தை ஆறு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in