
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமாகி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் கடலோர பகுதி சீற்றத்துடன் காணப்படும் என்றும் அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பும் என்றும் எனவே மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.