வேளாண்துறைக்கு ரூ.9,368 கோடி ஒதுக்கியது போதுமானதல்ல!

அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
வேளாண்துறைக்கு ரூ.9,368 கோடி 
ஒதுக்கியது போதுமானதல்ல!

"வேளாண்துறைக்கு ரூ.9,368 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியது போதுமானதல்ல" என்று பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும்; புதிதாகத் திறக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவையாகும்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கவும், சந்தைப்படுத்துவதற்கும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பாமக அதன் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 20 மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களாக அறிவிக்கப்படும், சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும், சிறுதானியங்களை மதிப்புகூட்டி விற்பனை செய்ய ரூ.92 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது பயனளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

"திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களுக்கான தொழிற்பேட்டை திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்பனவும் வரவேற்கத்தக்க திட்டங்களாகும். நெல்லுக்கு ரூ.2500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், அது குறித்த எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை" என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

" 2022-23ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பே ரூ.33,007 கோடி தான். இது கடந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.34,220 கோடியை விடக் குறைவு ஆகும். இது கூட 10 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் மொத்த மதிப்பு தான். வேளாண்துறைக்கு மட்டுமான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.9,368 கோடி மட்டுமே. இது போதுமானதல்ல" என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in