இன்ப அதிர்ச்சி... கார் ஓட்டுநர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி கிரெடிட்; பதறிய வங்கி அதிகாரிகள்!

இன்ப அதிர்ச்சி... கார் ஓட்டுநர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி கிரெடிட்; பதறிய வங்கி அதிகாரிகள்!

பழநியை சேர்ந்த கார் ஓட்டுநர் வங்கிக்கணக்கில் 9000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழநி நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நண்பருடன் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த 9ம் தேதி ராஜ்குமார் காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ராஜ்குமார் வங்கிக்கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறிப்பிட்டிருந்தது. அப்போது ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை என்ன முடியாமல் எவ்வளவு பணம் வந்துள்ளது என்பது தெரியாமல் குழம்பினார்.

பணம் டெபாசிட்
பணம் டெபாசிட்

மேலும் தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருந்த நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்வதாக நினைத்துள்ளார். இதனையடுத்து ராஜ்குமார் தனது வங்கிக்கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பிய பிறகு தான் 9 ஆயிரம் கோடி ரூபாய் தன் வங்கிக்கணக்கிற்கு வந்தது உண்மை என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அந்த மகிழ்ச்சி சில விநாடிகள் கூட நிலைக்கவில்லை.

நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பிய சற்று நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திரும்பி எடுத்துக்கொண்டது. பின்னர் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை தொலைபேசியில் அழைத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பணம் டெபாசிட்
பணம் டெபாசிட்

மேலும் 21 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்துமாறு வங்கித் தரப்பில் இருந்து ராஜ்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை அதிகாரிகளுடன், ஓட்டுநர் ராஜ்குமார் அவரது வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி ராஜ்குமாரை அனுப்பி வைத்ததாக தெரிகிறது. வாடகை கார் ஓட்டுநர் வங்கிக்கணக்கில் திடீரென 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in